திருச்சி: திருச்சி இடைத்தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் விதமாக,
அ.தி.மு.க.,வினர் "அனல்' பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். திருச்சி
மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அக்., 13ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.,வில்
வேட்பாளராக பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை
சந்தித்து ஆதரவுக்கோரி பிரசாரத்தை துவங்கிவிட்டார். அ.தி.மு.க.,வில் 15
அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட தேர்தல்பணிக்குழு அமைக்கப்பட்ட
பின்னர், வேட்பாளரும், தொண்டர்களும் அதிகபட்ச உற்சாகமாக பணியாற்றுகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி நேற்று உறையூர் பகுதியில் ஓட்டு
வேட்டையாடினார். வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து "தனக்கு ஓட்டளிக்க
வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். வேட்பாளருடன், அமைச்சர் சிவபதி,
மாநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார்,
மாவட்ட ஜெ., பேரவைச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். "அனல்'
பிரச்சாரம்: திருச்சியில் காலை நேரத்தில் கடுமையான வெயில், இரவு நேரத்தில்
மழை என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கொளுத்தும் வெயிலையும்
பொருட்படுத்தாது, வியர்வை சொட்ட, வேட்பாளர் வீதி, வீதியாக சென்று ஓட்டு
சேகரிக்கிறார். அவருடன் செல்லும் தொண்டர்கள், ஓட்டு சேகரிக்கும் விதமாக,
மக்களிடம் "அனல்' பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.