Monday, January 31, 2011

யார் யார்?

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : "சீட்' முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு


சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை, காங்., தலைவர் சோனியாவிடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்துகிறார். அ.தி.மு.க.,வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

"பா.ம.க.,வும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும்' என, டில்லியில் முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடியாக அறிவித்தார். இன்று மதியம் 12 மணிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை நடத்துகிறார்.

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டில்லிக்கு நேற்று வந்த முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறும் போது, ""தலைநகரில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது சோனியா, பிரதமரை சந்திப்பேன். சோனியாவை சந்திக்கும் போது, வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சொல்ல முடியாது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரசைத் தவிர விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இடம் பெறும்,'' என்றார்.

அ.தி.மு.க., அணியிலும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் இடம் பெற்றுள்ளன.தே.மு.தி.க., தமிழ்நாடு யாதவர் மகா சபை, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடனும் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் குழுவினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. ம.தி.மு.க., பொதுக்குழு வரும் 17ம் தேதி சென்னையில் கூடுகிறது. அக்கூட்டம் முடிந்த பின், அ.தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அக்கட்சி நடத்தும்.

இன்னும் 10 நாட்களுக்குள் தனது முடிவை அறிவிப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், தே.மு.தி.க.,வும் தனது இறுதி முடிவை அறிவித்ததும், கூட்டணிக் கட்சிகளுக்கான உடன்பாட்டில் இறுதி முடிவு எட்டி விடும்.பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் எந்தெந்த அணியில் யார் யார்? இடம் பெறுவர் என்பதும், யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற முடிவும் தெரிந்து விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபைத் தேர்தலுக்கான சுறுசுறுப்பு, கட்சிகளிடம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

-நமது சிறப்பு நிருபர்

No comments:

print