Monday, January 31, 2011

அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாறும் தேர்தல் களம்



சட்டசபைத் தேர்தலுக்கான இட பங்கீட்டு தொடர்பான தேர்தல் வியூகத்தை மற்ற அரசியல் கட்சிகளை அசர வைக்கும் நிலையில் அ.தி.மு.க., வகுத்துள்ளது. இதனால், கூட்டணி அமைவதற்கான இறுதி கட்டத்தில், தேர்தல் களம் திசை மாறும் என கருதப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தங்களது தகுதிக்கேற்ப பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்கு திட்டமிட்டு வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.அ.தி.மு.க., அணியில் தற்போது உள்ள கட்சிகளுடன், நடிகர் கார்த்திக்கின், "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' இணைந்துள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.கூட்டணிக்கு தலைமையேற்கவுள்ள தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுக்கு தனி மெஜாரிட்டி பெற, குறைந்தது 140 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட வேண்டியிருக்கும். மீதமுள்ள 94 இடங்களையே கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்விரு கட்சிகளும் உள்ளன. முழு மெஜாரிட்டி பெறாவிட்டால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் தயவை நாட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படும்.

இப்போதைய தமிழக அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், கூட்டணி அமைச்சரவை அமைக்காமலேயே, ஐந்து ஆண்டுகளை முதல்வர் தன் தனிப்பட்ட திறமையால் முழுமையாக பூர்த்தி செய்து விட்டார். எதிர் காலத்திலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால், தேர்தல் கூட்டணி அமைக்கும் போதே எந்தெந்த கட்சிகள் தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரும் என்பதை பார்த்து பார்த்து கூட்டணி அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

தலைவர்களைப் பொறுத்தவரையில் முதல்வர் கருணாநிதி, இதர கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர்; விட்டுக் கொடுத்து செயல்படக் கூடியவர். அவர் தன்னுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சித் தலைவர்களை எளிதில் வசமாக்கி விடுவார். அதனால், அவர் எத்தகைய கூட்டணிக்கும் தயாராக உள்ளார்.அந்த கட்சி கூட்டணியில் சேர பா.ம.க.,வைத் தவிர புதிய கட்சிகள் ஏதும் தயராக இல்லை. பா.ம.க., கூட அவ்வப்போது அ.தி.மு.க.,வில் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டா என்ற நப்பாசையுடன் தி.மு.க., கூட்டணிக்கு முழுமையாக சம்மதம் தெரிவிக்காமல் உள்ளது.

இதற்கு சாட்சி கூறுவது போல், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவாலயத்தில் பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி, பா.ம.க.,வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, "அவர்களும் சில சமிக்ஞைகளை அனுப்பியுள்ளனர். நாங்களும் சில சமிக்ஞைகளை கொடுத்துள்ளோம்' என்றார்.அதனால், தி.மு.க., கூட்டணியில் தான் பா.ம.க., என அனைவரும் நினைத்திருந்தனர். அதை அடுத்த சில தினங்களிலேயே பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மறுத்து விட்டார். இதில் யார் சொன்னது பொய் என்பது தெரியாத நிலை இதுவரை நீடிக்கிறது.

அ.தி.மு.க.,வின் நிலையோ வேறாக உள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க சிறிய கட்சிகள் முயன்று வருகின்றன. அதேசமயம் கருணாநிதியைப் போல், ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களுக்கு வளைந்து கொடுத்து செயல்பட மாட்டார். அதனால், அ.தி.மு.க.,வுடன் அதன் கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின் இணைந்து செயல்பட தயங்கும். இதை மனதில் வைத்தே ஜெயலலிதா, தன் கூட்டணியில் அதிகளவில் உதிரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவைகளை இணைத்து வருகிறார். இந்த சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தால், ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கை பற்றாக்குறை வந்தால் சரி செய்து கொள்ள முடியும் என்று அ.தி.மு.க., கருதுகிறது.

அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வை மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டினாலும், அதன் எம்.எல்.ஏ.,க்களை எளிதில் வளைத்து விடலாம். இதுவே அ.தி.மு.க.,வின் கணக்காக உள்ளது.அதற்கு ஏற்பவே அதன் கூட்டணி வியூகத்தை அ.தி.மு.க., வகுத்து வருகிறது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் எந்த கட்சியும் 45 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முரண்டு பிடித்தால் மூன்றாவது அணிதான் : தென் மாவட்டங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, புதிய தமிழகம், சேதுராமன் தலைமையிலான மூ.மு.க., கார்த்திக் கட்சி ஆகியவற்றை தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அ.தி.மு.க., பலமாக உள்ளது. இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.,வுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அ.தி.மு.க., பக்கம் வந்தால், மொத்த தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என அ.தி.மு.க., கணக்கு போடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுதால், அங்கும் அ.தி.மு.க., பலமாக உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் துணையோடு அதிக தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும். இந்நிலையில், மீதமுள்ள வடமாவட்டங்களில் வெற்றி பெற பா.ம.க.,வின் துணை கிடைத்தால் போதுமானது. பா.ம.க.,விற்கு அதிக பட்சம் 35 இடங்களை ஒதுக்கினால் வெற்றி எளிதாகி விடும் என்ற யோசனையும் அ.தி.மு.க.,விடம் உள்ளது.இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு நிபந்தனைகளை விதித்து, தே.மு.தி.க., தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அது மூன்றாவது அணி உருவாக காரணமாய் அமைந்துவிடும்.

நமது சிறப்பு நிருபர்

No comments:

print