Monday, January 31, 2011
புதுச்சேரி முன்னாள் முதல்வருடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு
புதுச்சேரி : "புதுச்சேரியில், ஊழலற்ற ஆட்சி அமைய அ.தி.மு.க., பாடுபடும். தேர்தல் கூட்டணி குறித்து தோழமை கட்சிகளுடன் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது' என, தம்பிதுரை எம்.பி., கூறினார். அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களான கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை எம்.பி., அமைப்பு செயலர் செம்மலை எம்.பி., இருவரும் நேற்று காலை, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நீடித்தது. பின், மாநில அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தோழமை கட்சிகளான இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., நிர்வாகிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, தம்பிதுரை, செம்மலை இருவரும், நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., ஆதரவுடன் நடக்கும் மக்கள் விரோத காங்., ஆட்சியில், நலத் திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படவில்லை. புதிய அரசு அமைக்க மக்கள் விரும்புகின்றனர்.
இதை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, புதுச்சேரியில், 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நிலையான ஆட்சி அமையும். முதல்கட்டமாக, தோழமைக் கட்சிகளான இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இது, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தான். கட்சியின் மேலிட உத்தரவுப்படி மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினோம். கூட்டணி கட்சிகள் குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., அணியில் கூட்டணி கட்சிகளுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment