Sunday, April 17, 2011

தமிழகத்தில் 8 தொகுதிகளில் மறு வாக்குப் பதிவில் 81% வாக்குப் பதிவு

சென்னை: தமிழகத்தில் 6 தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்ட 8 வாக்குச் சாவடிகளில்
81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கடந்த புதன்கிழமை அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் 77.8 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவே மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு ஆகும்.

இந்த தேர்தலின்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு, தேர்தல் புறக்கணிப்பு, வன்முறையால் மின்னணு எந்திரங்கள் சேதம் அடைந்தது போன்ற காரணங்களினால் மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் மறு ஓட்டுப் பதிவு நடத்த தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதையடுத்து 8 வாக்குச் சாவடிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. ஏற்கனவே நடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. மறு தேர்தலின்போது இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.

இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் சராசரியாக 81.3 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம் வாக்குச்சாவடியில் 70.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது புதன்கிழமை நடந்த ஓட்டுப்பதிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் நடந்த மறு ஓட்டுப்பதிவில் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது கடந்த வாக்குப் பதிவை விட 5 சதவீதம் குறைவாகும்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி, சங்கராபுரம் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப்பதிவில் 80.8 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இது கடந்த வாக்குப் பதிவை விட 5 சதவீதம் குறைவு.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் புளியம்பட்டி வாக்குச் சாவடியில் நடந்த மறு ஓட்டு பதிவில் 93.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது கடந்த ஓட்டுப்பதிவை விட 2.21 சதவீதம் அதிகம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் கிராமத்தில் இரு வாக்குச் சாவடிகளில் நடந்த மறு வாக்குப் பதிவில் முறையே 84.3 சதவீதம், 82.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இது முந்தைய ஓட்டுப்பதிவை விட 5 சதவீதம் குறைவாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் தொகுதியில், வளியவட்டம் மற்றும் பருத்திக்குடி ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் முறையே 87.2, 82.8 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

No comments:

print