Tuesday, April 12, 2011

வாக்காளர்களுக்குப் பணம்-திமுக, அதிமுக மோதல் எம்.எல்.ஏ மண்டை உடைப்பு

உடுமலை: வாக்காளர்களுக்குப் பணம் தருவது தொடர்பாக திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் அதிமுக எம்.எல்.ஏவின் மண்டை உடைக்கப்பட்டது. அதேபோல அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் கார் டிரைவரும் தாக்கப்பட்டார்.


உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சார்பாக திங்கள்கிழமை மாலையில் வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு அதிமுகவினர் விரைந்து வந்து வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அமைச்சர் சாமிநாதன் வீட்டுக்குள் இருந்தார்.

மேலும், உடுமலை எம்.எல்.ஏ.வும் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளருமான சி.சண்முகவேலுவும் அங்கு வந்தார். பொள்ளாச்சி மற்றும் உடுமலை டி.எஸ்.பி.க்களும், போலீஸாரும் உடுக்கம்பாளையம் விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

அந்த சமயம் பார்த்து திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து திமுதிமுவென அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதலில் குதித்தனர். சண்முகவேலுவை குறி வைத்து தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது.

பதிலுக்கு அதிமுகவினரும் தாக்குதலில் குதித்தனர். சாமிநாதனின் கார் டிரைவர் உள்ளிட்டோரைத் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த சண்கமுவேலு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதேபோல அமைச்சர் சாமிநாதனும் பத்திரமாக அங்கிருந்து வெளியேறினார்.

தாக்குதலில் போலீஸார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

திமுகவினரின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த உடுமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் பஸ் நிலையத்தில் மறியலில் குதித்தார்.

பிரச்சினை வெடிக்காமல் இருக்க போலீஸ் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

print