Monday, April 11, 2011

ஊழல் நிறைந்த தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்:நரேந்திர மோடி

ஓசூர்:""தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுத்த, ஊழல் நிறைந்த தி.மு.க., ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.ஓசூர், தளி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பாலகிருஷ்ணன், நரேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இலவச கலர், "டிவி', மிக்சி மற்றும் கிரைண்டர் என, அறிவித்துள்ளன. இது மக்களை ஏமாற்றும் செயல். மின்சாரம் இல்லாமல், "டிவி', கிரைண்டர் கொடுத்து என்ன பயன்.
குஜராத்தில் இதுபோல் இலவசங்களை மக்களுக்கு கொடுக்கவில்லை; மாறாக, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. குஜராத், ஆந்திராவில் பஞ்சு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆந்திராவில் பஞ்சு விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் தற்கொலை செய்கின்றனர். குஜராத்தில் விவசாயிகள் சீனாவுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.உத்தர பிரதேசம் அருகில் உள்ள நர்மதா நதியில் இருந்து குஜராத்தில், 2,000 கி.மீ., தூரத்துக்கு பைப் லைன் மூலம், 8,000 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.


குடிநீர் கொண்டு வரப்படும் குழாய், கருணாநிதி தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் தாராளமாகச் சென்று வரக்கூடிய அளவுக்கு பெரியதாக உள்ளது.ஓசூர், தளிக்கு மிக அருகில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து தமிழக அரசால் இன்னும் குடிநீர் கொண்டு வர முடியவில்லை. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன், கடும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்ய முடியாத பாலைவன பூமியாகக் காணப்பட்டது. தற்போது, 6 லட்சம் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், விவசாயம் தற்போது, 16.5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.குஜராத்தில் அகண்ட அலைவரிசை இணைப்பு இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் தற்போது தான் அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் முழுமையாக அகண்ட அலைவரிசை வசதி கிடைக்க இன்னும் 10 ஆண்டுகளாகும்.மத்திய அரசு நிதியுதவி இல்லாமல் குஜராத்தில், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.


குஜராத் அரசு மீது சிறிய ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூட சொல்ல முடியாது.ஆனால், தினம், "டிவி' பத்திரிகைகளில் தி.மு.க., - காங்கிரஸ் அரசுகளின் ஊழல்கள் தான் வெளி வருகின்றன. ஊழலை நாட்டை விட்டு விரட்ட, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் அவர்களால் பெரும்பான்மை பெற முடியுமா? என மக்கள் நினைக்கலாம்.குஜராத்தில், 15 ஆண்டுக்கு முன் மூன்று பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் தான் இருந்தனர். தற்போது மூன்றில், இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடக்கிறது. அதனால், தனி மனிதன் நினைத்தால் கூட ஊழலை ஒழிக்கலாம்.இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து சாதித்துக் காட்டியதை கூறலாம்.தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக போராட, தேர்தல் மூலம் ஒரு வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

print