Sunday, May 22, 2011

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

சென்னை : தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ.,வான செ.கு. தமிழரசன் இன்று காலை ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழரசன் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாளை காலை தற்காலிக சபாநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே மாதம் 27ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றபின் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசும் போது, இந்திய குடியரசு கட்சியைத் தான் முதலில் அழைத்து சீட் ஒதுக்கினார்.கடந்த 1991ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் பொன்னம்மாளை தற்காலிக சபாநாயகராக நியமித்தார். அதேபோல், 2001ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த என்னை நியமித்துள்ளார். அவருக்கு எனது நன்றி. அவர், தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவார்.இவ்வாறு தமிழரசன் கூறினார்.

மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா

டெல்லி: திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும்.

வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் மயமாகிப் போய் விட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

ஊழலுக்கெல்லாம் தாய் என்ற பெருமையை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தட்டிக் கொண்டு போய் விட்டது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதில் பாலிட்டிக்ஸ் செய்து பாயாஸம் சாப்பிடப் பார்த்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக குட்டியதைத் தொடர்ந்து சிபிஐயை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மிக மிக தாமதமாக தொடங்கிய இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் அரசியல் புகுந்து விளையாடியது. ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து திமுகவிடம் பேரம் பேசி ஏகப்பட்ட சீட்களை வாங்கியது காங்கிரஸ் என்று தேர்தலின்போது குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இப்படி தொட்டதெல்லாம் ஊழல், தொடர்வதெல்லாம் ஊழல் என்று காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி ஆட்சிக்கும் ஊழல் பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்தது.

இதை விட மோசமான கெட்ட பெயர் எதுவென்றால், ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலையை, காந்தி, புத்தர் போன்ற அகிம்சாவாதிகளைக் கொடுத்த இந்தியா, அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து ரசித்த செயல்தான்.

பல ஆயிரம் அப்பாவி மக்களை சிங்கள அரசும், அதன் ஏவல் படைகளான ராணுவமும் குத்திக் குதறிக் கூறு போட்டபோது மன்மோகன் சிங் அரசை நோக்கி உலகெங்கும் இருந்து கூப்பாடு போட்டு கெஞ்சிக் கேட்டனர் தமிழ் மக்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர்கள் போட்ட கூச்சல் மன்மோகன் சிங்கின் காதுகளிலும் விழவில்லை. அவரை இயக்கி வரும் சோனியா காந்தியின் காதுகளிலிலும் விழவில்லை.

எல்லாம் முடிந்து ஈழமே இழவு வீடாகிப் போன பின்னரும் கூட அங்குள்ள மக்களை கரை சேர்க்க, கை தூக்கி விட இந்திய அரசு தயாராக இல்லை.

ஈழத்தில் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சிதிலமாக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அத்தனை தமிழர்களின் ரத்தமும் மனமோகன் சிங் அரசின் மீது படிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதைத் தடுத்திருக்கலாம். அத்தனை அப்பாவிகளின் உயிர்களையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மன்மோகன் சிங் அரசு அதைச் செய்யாமல் போனது ஈழத்துத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ் உலகும் பெரும் வேதனையில் ஆழ்ந்தது என்பது உண்மை. இந்த உண்மையைத்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு மூலம் காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டது.

79 வயதாகும் மன்மோகன் சிங், நேருவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றாலும் கூட இத்தனைகாலமாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன்னை நோக்கி வீசப்பட்ட ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட எதற்குமே இதுவரை உருப்படியாக பதிலளித்ததில்லை. மெளனச் சாமியாராக மட்டுமே அவர் காட்சி தந்து வருகிறார்.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட இந்த ஆட்சியில்தான் ஊழல் மலிந்து நாறிப் போய் விட்டது. இதற்கும் இதுவரை உருப்படியான விளக்கத்தை மன்மோகன் சிங்கோ அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியோ கொடுத்ததில்லை.

மன்மோகன் சிங் அரசின் சாதனை என இந்த ஆட்சிக்காலத்தில் பெரிதாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கோட்டையைத் தகர்த்த பெருமை கூட காங்கிரஸுக்குக் கிடையாது. திரினமூல் காங்கிரஸுக்குத்தான் அந்த முழுப் பெருமையும். தமிழகத்தில் ஐந்து எம்.எல்.ஏக்களுடன் அசிங்கப்பட்டு நிற்கிறது. கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட நித்தியகண்டம் பூரணாயுசு கதைதான்.

கர்நாடகத்தில் கவர்னர் மூலம் என்னென்னவோ செய்து பார்த்தும் பாஜக அரசை அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி இல்லாத பாலிட்டிக்ஸையெல்லாம் செய்தும் இதுவரை பெரிதாக எதையும் சாதித்ததாக தெரியவில்லை. பீகாரில் ராகுல் காந்தியின் பார்முலா மகா மோசமாக மண்ணைக் கவ்வியதை நாடு பார்த்தது.

விலைவாசி உயர்வு, இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளத் தீர்க்க ஒரு அருமையான திட்டத்தை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை.

ஆட்சியைப் பிடித்தபோது இருந்த செல்வாக்கை விட பல சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது காங்கிரஸ் கட்சி என்ற சர்வேக்ககள் கூறுகின்றன. அதை அறிய சர்வே தேவையில்லை. மக்கள் முகங்களைப் பார்த்தாலே போதும், இந்த ஆட்சியின் அவலத்தைப் புரிந்து கொள்ள

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: கொடநாட்டில் கிடா வெட்டி விருந்து

கோத்தகிரி: சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் பொருட்டு நேற்று கொடநாட்டில் கிடா வெட்டு நடந்தது.

சிறப்பு பூஜை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கோடநாடு எஸ்டேட்டில் கிடா வெட்டு நடந்தது. எஸ்டேட்டில் உள்ள அம்மன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கிடா வெட்டப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள், உள்ளூர் அதிமுகவினர், சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்து

பூஜைகள் முடிந்ததும் தொழிலாளர்களுக்கும், கட்சியினருக்கும் பிரம்மாண்டமான விருந்து நடந்தது.

Saturday, May 21, 2011

தாலிக்குத் தங்கம் பெற தேவையான தகுதிகள்-அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய தேவைப்படும் 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பெற தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பபடித்த ஏழைப் பெண்கள் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் ஆகிய உறுதிமொழியை அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்பித்தார் ஜெயலலிதா.

தற்போது இதற்கான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விவரம்...

- படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

- திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

- இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.

- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது.

எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. தங்கத்தை மொத்தமாக ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்வதா அல்லது டெண்டர் மூலம் வாங்குவதா என்று பலவழிகளிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

கனிமொழியின் வாழ்க்கை! சிறையில் முடங்கியது

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த வசதியும் இல்லாத அறை அது.

43 வயதான கனிமொழியின் சிறை வாழ்க்கை குறித்த ஒரு பார்வை...

நேற்று மாலை திஹார் சிறைக்கு கனிமொழி கொண்டு செல்லப்பட்டார். கண்கலங்கிய நிலையில் பாட்டியாலா கோர்ட் லாக்கப்பிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது அவர் மீண்டும் கலங்கினார்.

வேனில் அவருக்குப் பாதுகாப்பாக வந்த திஹார் சிறைக் காவலர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் கனிமொழியுடன் தமிழில் பேசவே சற்று ஆறுதலடைந்தார் கனிமொழி. அவர்களுடன் தமிழில் உரையாடியபடி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எந்த ஊர், எப்போது முதல் இங்கு பணியாற்றுகிறீர்கள், டெல்லியில் வேலை எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டுக் கொண்டே வந்தாராம் கனிமொழி.

சிறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு சிறை விதிமுறைகள் விளக்கிச் சொல்லப்பட்டது. அதை அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்னர் சிறை விதிமுறைகளின்படி சில ஆபரணங்களை அவர் கழற்றிக் கொடுத்து விட்டார். அவரது முகத்திற்கு அழகூட்டும் மூக்குத்தியும் அதில் ஒன்று.

மூக்குக் கண்ணாடி, சிறிய கைப்பை, சில புத்தகங்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை சிறைக் காவலர்கள் 8ம் எண் அறைக்குக் கொண்டு சென்று விட்டனர். அது மிகச் சிறிய அறை. அந்த அறையில் ஒரு கழிப்பறை மற்றும் படுத்துத் தூங்குதவற்காக ஒரு சிறிய மேடை போன்ற இடம் ஆகியவை மட்டும் உள்ளன.

கனிமொழியின் கண்ணியத்தைப் பாராட்டிய சிபிஐ நீதிபதி அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், மின்விசிறி சலுகை தரலாம் என சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதன்படி கனிமொழி டிவி, செய்தித் தாள்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்குள்தான் தனது சிறை வாழ்க்கையை கழித்தாக வேண்டும் கனிமொழி. இங்கேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு குளித்துக் கொள்ளலாம். கழிப்பறை உள்ள பகுதியில்தான் அவர் குளிக்க வேண்டும். அதற்கும், தூங்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு ஏதும் கிடையாது. துணியால் மறைத்தபடி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.

கனிமொழி தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட நீதிபதி அனுமதித்துள்ளார். மருந்துகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான சாப்பாட்டை சாப்பிட கனிமொழிக்கு தடை இல்லை.

இருப்பினும் இவை தவிரகனிமொழிக்கென்று வேறு எந்த சிறப்புச் சலுகையும் தரப்பட மாட்டாது. வழக்கமான கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுவார் என்று சிறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி விஐபி கைதி என்பதால் அவரைத் தாக்கி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள சிலர் முயலலாம் என்பதால் அது நடந்து விடாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அறைக்கு முன்பு 24 மணி நேர பாதுகாப்பு தரப்படும் என்றும், கனிமொழியுடன் ஒரு பாதுகாவலர் எப்போதும் இருப்பார் என்றும் குப்தா கூறியுள்ளார்.

தனது அறை உள்ள பகுதியையொட்டியுள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் கனிமொழி பேசத் தடை இல்லை. அதேசமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேச அவருக்கு அனுமதி கிடையாது.

கனிமொழி விசாரணைக் கைதி என்பதால் அவர் வழக்கமான உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் இரவை கனிமொழி நல்ல தூக்கத்தின் மூலம் கழித்தாராம். இரவு 11 மணிக்குத் தூங்கிய கனிமொழி காலை ஐந்தரை மணியளவில் எழுந்துள்ளார். கோர்ட்டுக்குக் கிளம்ப தயாரானார்.

நேற்று இரவும், இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவையே சாப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைக்கும் வரை இந்த குறுகிய அறைக்குள்தான் கனிமொழி தங்கியிருக்க வேண்டும்.

Friday, May 20, 2011

கனிமொழி கைது: கருணாநிதி கருத்து

சென்னை: “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்': கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அதனடிப்படையில், வரும் டிசம்பருக்குள், 14 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், "தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். இதனால், துறை வாரியாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கும் திட்டம் குறித்து, நேற்று முன்தினம், சென்னையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு செய்தார். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அமலில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது முடிந்தபின், மாவட்ட வாரியாக பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மாணவியர் குறித்த விவரங்களை கணக்கெடுத்து அளிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் செலவுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும், "லேப்-டாப்'கள் தரமான நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறித்தும், ஆராயப்பட்டன. மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான புள்ளி விவரம், ஆகஸ்ட் இறுதியில் தெரியவரும். எனினும், 14 லட்சம் பேருக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், உயர் கல்வித்துறை சார்பாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன.

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-சிபிஐ கைது செய்தது, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் கைது

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்யவும் அவர் சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது. அவரை சிபிஐ திஹார் சிறையில் அடைக்கும் என்று தெரிகிறது.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைதானார்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:

இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

Thursday, May 19, 2011

நம்பவைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா

சென்னை: ‘நம்பவைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி’ என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: தனித்தே ஆட்சி என்று தன்னிச்சையாக புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி அறிவித்திருக்கிறார். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.  நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரியில் நான் பிரசாரம் செய்தேன்.

அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்கவிருந்த என். ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட என்.ரங்கசாமிக்கு மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் என்.ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள என்.ரங்கசாமி, மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வரின் ஏமாற்று நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக புதுச்சேரியில் செயல்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

print