Wednesday, May 18, 2011

புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலா ராணி-ஜெ நியமனம்

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி, அதிகாரமில்லாத துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

அதே போல உள்துறைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் ஞானதேசிகன் இருந்தார். சுங்கத் இதுவரை தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு வாரிய முதன்மைத் தலைவராக இருந்து வந்தவர் ஆவார். இப்போது இவர் வசம் காவல்துறை வந்துள்ளது.

முதல்வராக பதவியேற்றவுடன் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார், உள்துறைச் செயலாளராக சுங்கத்தை நியமித்துள்ளார். சாரங்கி இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வு பெற்றபோது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கியின் பெயர் இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த இவர் 1977 பேட்ச் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாவார். இவரை விட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சூசன் மேத்யூ, பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமைச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களை ஒதுக்கிவிட்டு சாரங்கியை நியமித்துள்ளார் ஜெயலலலிதா.

மிக நடுநிலையானவர் என பெயர் எடுத்த சாரங்கியின் மனைவி தமிழ்ப் பெண் ஆவார். இவர்களது மகன் ஐடி துறையில் பணியாற்றுகிறார். மகள் அமெரிக்காவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார்.

உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலாராணி சுங்கத், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ம் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகள் தெரிந்தவர். ஷீலாராணி சுங்கத்தின் கணவர் மோகன் வர்க்கீஸ் சுங்கத், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

முதல்வரின் புதிய செயலாளர்கள்:

அதே போல முதல்வரின் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெங்கடரமண் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராகவும், ராவ் விவசாயத்துறை செயலாளராகவும் இருந்தவர்கள்.

இதில் ஷீலா ப்ரியா முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாராகவும், ராவும் வெங்கடரமணும் முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாகவும் இருப்பர்.

அதே போல ராமலிங்கம், ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி அந்தஸ்து கூடுதல் செயலாளர் என்ற நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அந்தத் துறையின் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக டம்மி போஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சட்டப் பேரவையின் செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறைத்துறை இயக்குனராக மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பில் கூடுதல் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து பல துறைகளின் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.

No comments:

print