டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதியே தேர்தல் முடிந்து விட்டது. அதே தினத்தில் கேரளா, புதுச்சேரிக்கும் தேர்தல் நடந்தது. அஸ்ஸாமில் 2 கட்டமாக நடந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில்தான் ஆறு கட்டமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். மேற்கு வங்க தேர்தல் முடிவதற்காக மற்ற நான்கு மாநிலங்களும் காக்க வேண்டியதாகி விட்டது.
மேற்கு வங்கத்திலும் தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. இதையடுத்து வருகிற 13ம் தேதி இந்த ஐந்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.
ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 839 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
வாக்கு எண்ணும் மையங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் 43,982 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்புப் பணியில் 17,700 மத்திய படையினர் ஈடுபடவுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவுள்ளதால் பிற்பகல் 1 மணியளவில்தான் முதல் முடிவு தெரிய வரும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முழுவதும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படவுள்ளது. எந்தவித மோசடியும் நடைபெறாத வகையில் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது குறித்து எக்ஸிட் போல் முடிவுகளை பலரும் வெளியிட்டுள்ளதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. மே 13ம் தேதியன்று நிஜமான முடிவுகள் தெரிந்து விடும் என்பதால் மக்கள் தங்களது பார்வையை ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதியை நோக்கி திருப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment