Saturday, May 14, 2011

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

சென்னை: சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2855 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இத்தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே பரபரப்பு நிலவியது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் ஸ்டாலின் 145 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். 2வது சுற்றில் 351 ஓட்டுகள், 3வது சுற்றில் 255 ஓட்டுகள், 4வது சுற்றில் 555 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். 5வது சுற்றில் சைதை துரைசாமி 273 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதன் பிறகு, சைதை துரைசாமி முன்னணி பெறத் துவங்கினார். இதன் பிறகு, 6 மற்றும் 7வது சுற்றிலும் துரைசாமியே முன்னிலையில் இருந்தார். 8வது சுற்றில் துரைசாமி 66 ஓட்டுகள் பின் தங்கினார். 9வது சுற்று எண்ணப்பட்ட போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, 10 வது சுற்று தொடர்ந்தது. 15 வது சுற்று வரை ஏதும் பிரச்னை இல்லை. 16வது சுற்றில் ஒரு மிஷன் வேலை செய்யவில்லை. 17 மற்றும் 18 வது சுற்று எண்ணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, 19வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று மிஷின்களையும் எடுத்து வந்து எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது.

இந்த மூன்று பெட்டிகளில் உள்ள எண் மாறியிருப்பதாகவும், பெட்டி மாற்றப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், 19வது சுற்று எண்ணப்படவில்லை. அப்போது, அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளருக்கும் அடி விழுந்தது. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து, மையத்திலிருந்த இருகட்சியினரையும் அடித்து விரட்டினர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்தனர். வேட்பாளர் சைதை துரைசாமியிடம் பிரச்னை குறித்து கேட்டனர். அப்போது அவர், மூன்று ஓட்டு பெட்டிகள் மாறியுள்ளதாக கூறினார். ஓட்டு எண்ணும் மையத்திற்கு தி.மு.க., வேட்பாளர் ஸ்டாலின் வரவில்லை. தி.மு.க.,வினர் கூட்டமாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் நின்று கூச்சல் குழப்பம் செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீஸ் இணை கமிஷனர் சாரங்கன், துணை கமிஷனர்கள் பன்னீர்செல்வம், லட்சுமி, மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன் பிறகு, பதட்டம் சற்று ஓய்ந்தது.

ஓட்டு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க.,வினர் கூறும் போது,""மூன்று பெட்டிகளை மாற்றி விட்டனர். சீரியல் எண்கள் மாறியுள்ளன. நாங்கள் கேட்டதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளரை நாங்கள் அடிக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறாததால், இத்தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும்,'' என்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய இப்பிரச்னை 7 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு, 8 மணி வரை போலீசார் இருதரப்பினரிடமும், இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்
சுற்று தி.மு.க., அ.தி.மு.க.,
1 3898 3753
2 3657 3306
3 3662 3407
4 3503 2948
5 3074 3347
6 3440 4569
7 3009 3106
8 3031 2965
9 3111 3311 (இந்த சுற்று எண்ணும் போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை)
10 3856 3446
11 3467 2721
12 3867 4287
13 3903 4218
14 4543 3816
15 3180 3560
16 3674 3054 (இந்த ரவுண்ட் எண்ணும் போது ஒரு மிஷின் வேலை செய்யவில்லை)
17 4004 3856
18 4139 3687
19 சுற்று எண்ணிக்கை துவங்கப்பட்ட போது பிரச்னை ஏற்பட்டது. இந்த சுற்றில், ஐந்து பெட்டிகள் எண்ண வேண்டியுள்ளது. முதலில் மூன்று பெட்டிகள் உட்பட, மொத்தம் எட்டு பெட்டிகள் எண்ணப்படாமல் உள்ளன.

ஸ்டாலின் வெற்றி: தமிழகம் முழுவதிலிருந்தும் அனைவரின் கவனமும் கொளத்தூர் பக்கம் திரும்பியது. இரவு வரை பரபரப்பு நீடித்தது. இறுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஸ்டாலின் 2855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இதை கேட்டு தி.மு.க., வினர் நிம்மதி அடைந்தனர்.

No comments:

print