Sunday, May 22, 2011

மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா

டெல்லி: திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும்.

வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் மயமாகிப் போய் விட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

ஊழலுக்கெல்லாம் தாய் என்ற பெருமையை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தட்டிக் கொண்டு போய் விட்டது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதில் பாலிட்டிக்ஸ் செய்து பாயாஸம் சாப்பிடப் பார்த்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக குட்டியதைத் தொடர்ந்து சிபிஐயை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மிக மிக தாமதமாக தொடங்கிய இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் அரசியல் புகுந்து விளையாடியது. ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து திமுகவிடம் பேரம் பேசி ஏகப்பட்ட சீட்களை வாங்கியது காங்கிரஸ் என்று தேர்தலின்போது குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இப்படி தொட்டதெல்லாம் ஊழல், தொடர்வதெல்லாம் ஊழல் என்று காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி ஆட்சிக்கும் ஊழல் பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்தது.

இதை விட மோசமான கெட்ட பெயர் எதுவென்றால், ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலையை, காந்தி, புத்தர் போன்ற அகிம்சாவாதிகளைக் கொடுத்த இந்தியா, அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து ரசித்த செயல்தான்.

பல ஆயிரம் அப்பாவி மக்களை சிங்கள அரசும், அதன் ஏவல் படைகளான ராணுவமும் குத்திக் குதறிக் கூறு போட்டபோது மன்மோகன் சிங் அரசை நோக்கி உலகெங்கும் இருந்து கூப்பாடு போட்டு கெஞ்சிக் கேட்டனர் தமிழ் மக்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர்கள் போட்ட கூச்சல் மன்மோகன் சிங்கின் காதுகளிலும் விழவில்லை. அவரை இயக்கி வரும் சோனியா காந்தியின் காதுகளிலிலும் விழவில்லை.

எல்லாம் முடிந்து ஈழமே இழவு வீடாகிப் போன பின்னரும் கூட அங்குள்ள மக்களை கரை சேர்க்க, கை தூக்கி விட இந்திய அரசு தயாராக இல்லை.

ஈழத்தில் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சிதிலமாக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அத்தனை தமிழர்களின் ரத்தமும் மனமோகன் சிங் அரசின் மீது படிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதைத் தடுத்திருக்கலாம். அத்தனை அப்பாவிகளின் உயிர்களையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மன்மோகன் சிங் அரசு அதைச் செய்யாமல் போனது ஈழத்துத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ் உலகும் பெரும் வேதனையில் ஆழ்ந்தது என்பது உண்மை. இந்த உண்மையைத்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு மூலம் காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டது.

79 வயதாகும் மன்மோகன் சிங், நேருவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றாலும் கூட இத்தனைகாலமாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன்னை நோக்கி வீசப்பட்ட ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட எதற்குமே இதுவரை உருப்படியாக பதிலளித்ததில்லை. மெளனச் சாமியாராக மட்டுமே அவர் காட்சி தந்து வருகிறார்.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட இந்த ஆட்சியில்தான் ஊழல் மலிந்து நாறிப் போய் விட்டது. இதற்கும் இதுவரை உருப்படியான விளக்கத்தை மன்மோகன் சிங்கோ அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியோ கொடுத்ததில்லை.

மன்மோகன் சிங் அரசின் சாதனை என இந்த ஆட்சிக்காலத்தில் பெரிதாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கோட்டையைத் தகர்த்த பெருமை கூட காங்கிரஸுக்குக் கிடையாது. திரினமூல் காங்கிரஸுக்குத்தான் அந்த முழுப் பெருமையும். தமிழகத்தில் ஐந்து எம்.எல்.ஏக்களுடன் அசிங்கப்பட்டு நிற்கிறது. கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட நித்தியகண்டம் பூரணாயுசு கதைதான்.

கர்நாடகத்தில் கவர்னர் மூலம் என்னென்னவோ செய்து பார்த்தும் பாஜக அரசை அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி இல்லாத பாலிட்டிக்ஸையெல்லாம் செய்தும் இதுவரை பெரிதாக எதையும் சாதித்ததாக தெரியவில்லை. பீகாரில் ராகுல் காந்தியின் பார்முலா மகா மோசமாக மண்ணைக் கவ்வியதை நாடு பார்த்தது.

விலைவாசி உயர்வு, இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளத் தீர்க்க ஒரு அருமையான திட்டத்தை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை.

ஆட்சியைப் பிடித்தபோது இருந்த செல்வாக்கை விட பல சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது காங்கிரஸ் கட்சி என்ற சர்வேக்ககள் கூறுகின்றன. அதை அறிய சர்வே தேவையில்லை. மக்கள் முகங்களைப் பார்த்தாலே போதும், இந்த ஆட்சியின் அவலத்தைப் புரிந்து கொள்ள

No comments:

print