Saturday, May 21, 2011

தாலிக்குத் தங்கம் பெற தேவையான தகுதிகள்-அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய தேவைப்படும் 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பெற தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பபடித்த ஏழைப் பெண்கள் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் ஆகிய உறுதிமொழியை அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்பித்தார் ஜெயலலிதா.

தற்போது இதற்கான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விவரம்...

- படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

- திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

- இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.

- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது.

எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. தங்கத்தை மொத்தமாக ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்வதா அல்லது டெண்டர் மூலம் வாங்குவதா என்று பலவழிகளிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

No comments:

print