Saturday, May 7, 2011

வாக்கு எண்ணும் இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்.பி, மேயர் நுழைய தடை

சென்னை : வாக்கு எண்ணும் இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்.பி, மேயர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 13ம் தேதி 91 மையங்களில் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர் ஆகியோர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: வாக்கும் எண்ணும் மையத்துக்குள் சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மையங்களில் 100 மீட்டர் இடைவெளிக்குள் வாகனங்களை கொண்டு செல்லக் கூடாது. வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகளாக நியமிக்கப்படுவோர் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயராக இருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேட்பாளர்கள், ஏஜென்ட் டுகள் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வேட்பாளர்கள், ஏஜென்ட்டுகள், தேர்தல் அதிகாரிகள் யாரும் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது. வெளிமாநில மைக்ரோ அப்சர்வர் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம்.

பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு செல்லலாம். ஆனால், வாக்கும் எண்ணும் அறைக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. முதல் முறையாக செய்தி சேகரிக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தனி அறை ஒதுக்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.  ஜெனரேட்டர் வசதி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூமில்’ மின்சாரம் தடை ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதையும் மீறி தடை ஏற்படுமானால், உடனடியாக மின்சாரம் கிடைக்கும் வகையில் தானியங்கி ‘ஜெனரேட்டர்’ வசதி ஒவ்வொரு மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:

print