Tuesday, May 17, 2011

சட்டசபை தேர்தலில் கறுப்பு பணம் தமிழகத்தில் 85 சதவீதம் பறிமுதல்

 
சென்னை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் போது, தேர்தல் கமிஷனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், 85 சதவீதம் தமிழகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தல்களின் போது, கணக்கில் காட்டாமல், நடமாட்டத்தில் இருந்த, மொத்தம் 70 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இம்முறை, தேர்தல் கமிஷனுடன் இணைந்து வருமான வரிதுறையும், இந்த நடவடிக்கையில் கண்டிப்புடன் நடந்து கொண்டது.

ஐந்து மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், தமிழகத்தில் இருந்து மட்டும் 60 கோடி ரூபாயும், கேரளாவில் இருந்து 65 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதிலும் இருந்து 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இம்முறை, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கை எடுத்ததால், திருமணத்திற்கு செக் கொடுத்தது, திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிய போது பில் செலுத்தியது, மருத்துவ பில் செலுத்தியது, செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்தது, கொரியரில் பணம் அனுப்பியது, பொருட்கள் வாங்க பல்வேறு கலர்களில் டோக்கன் வழங்கியது என திரைமறைவுக்கு பின் பல்வேறு செயல்களில் ஈடுபட்டது, அன்றாட செய்தியாக வெளியானது.

ஆம்புலன்சில், போலீஸ் வேனில், பயணிகள் பஸ்சில் என இம்முறை கடத்திய பணம் கைப்பற்றப்பட்டது. இதற்கு காரணம், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு. தேர்தல் கமிஷன், "எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்' என்று தொலைபேசி எண் வழங்கியிருந்ததும், பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த உதவியது.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் தலைவர் பிரவீன் குமார் கூறுகையில், "தமிழகத்தில் வீட்டுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு அளித்தாலும், பண நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்' என்று கூறினார்.

மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்க இருக்கும் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின் போது, "ஆளும் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், அது உங்களுடைய பணம். ஆனால், சிந்தித்து வாக்களியுங்கள்' என்றார்.

அதுதான், தமிழகத்திலும் நடந்தது. அப்படியே தமிழக மக்கள் பணம் வாங்கியிருந்தாலும் தப்பில்லை. அது தமிழக மக்களின் பணம்.

No comments:

print