Sunday, May 22, 2011

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

சென்னை : தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ.,வான செ.கு. தமிழரசன் இன்று காலை ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழரசன் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாளை காலை தற்காலிக சபாநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே மாதம் 27ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றபின் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசும் போது, இந்திய குடியரசு கட்சியைத் தான் முதலில் அழைத்து சீட் ஒதுக்கினார்.கடந்த 1991ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் பொன்னம்மாளை தற்காலிக சபாநாயகராக நியமித்தார். அதேபோல், 2001ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த என்னை நியமித்துள்ளார். அவருக்கு எனது நன்றி. அவர், தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவார்.இவ்வாறு தமிழரசன் கூறினார்.

No comments:

print