Tuesday, May 10, 2011

வாக்கு எண்ணிக்கை: 55 கூடுதல் பார்வையாளர்கள் தமிழகம் வருகை

சென்னை: வரும் 13ம் தேதி நடக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட 55 கூடுதல் பார்வையாளர்கள் வர உள்ளனர்.

இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் வீதம் தேவை என்று மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த 55 கூடுதல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. இவர்கள் 12ம் தேதி தமிழகம் வருவர்.

ஏற்கெனவே இப்போது 122 பொது பார்வையாளர்கள், 57 செலவினப் பார்வையாளர்கள் என 179 பேர் உள்ளனர்.

மே 13ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செல்போன் பயன்படுத்தலாம் என்றார்.

No comments:

print