Wednesday, May 4, 2011

தேர்தல் ஆணையம் விதிகளுக்கு உள்பட்டே செயல்படுகிறது-பிரவீண் குமார்

மதுரை: விதிமுறைகளுக்கு உள்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் பிற மாநிலங்களைப் போல்தான் தமிழகத்திலும் தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.


நிருபர்களிடம் அவர் பேசுகையில், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலிலும் தேர்தல் ஆணையத்துக்கு அடிப்படையில் என்ன விதிமுறைகள் உள்ளனவோ, அந்த விதிமுறைகளை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறோம். அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு, தேவையைப் பொறுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போஸ்டர் ஒட்டுவது, சுவர் விளம்பரம் செய்வது, போர்டுகள் வைப்பது போன்றவற்றிற்கு ஏற்கனவே சட்ட திட்டங்கள் உள்ளன. அதைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். விதிமுறைகளுக்கு உள்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் விதிமுறை மீறல் குறித்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதன் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் மொத்தம் 62 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சுவற்றில் கட்சிச் சின்னம், வேட்பாளர் பெயர் எழுதுவது போன்றவையாகும். பணப் பட்டுவாடா குறித்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 330 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 296 வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்குகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும். அவ்வாறு தபால் வாக்குக்காகப் பணம் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். இதில், ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி திறக்கப்பட்டதாகப் பிரச்னை எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டது. அங்கு, தபால் வாக்கின் விண்ணப்பங்கள் ஏதும் பிரித்துப் பார்க்கப்படவில்லை.

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது வெளிப்படையாகப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் தேர்தலில் கட்சியினர் மறைமுகமாகத்தான் பணம் பட்டுவாடா செய்தனர்.

மதுரை மேற்குத் தொகுதியில் பணப் பட்டுவாடா மற்றும் பணம் பட்டுவாடாவுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் அறிக்கை எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக நானும் ஓர் அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளேன். குறிப்பாக, பணம் விநியோகம் எவ்வாறு, எப்படியெல்லாம் நடந்துள்ளது, எப்படி பறிமுதல் செய்யப்பட்டது போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும் என்றார் பிரவீண் குமார்.

No comments:

print