Saturday, May 14, 2011

தமிழகத்தில் காங்., படுதோல்வி ; ராஜினாமா என்ற பெயரில் தங்கபாலு ஓட்டம் பிடித்தார்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதை அடுத்து இந்த பதவியில் நீடிக்க விருப்பம் இல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே காங்., கட்சியில் இவர் தலைவராக நீடிக்க கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமையை நிலைநாட்ட தவறியவர்: தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் பெரும் சண்டையிட்டு பிணக்குடன் 63 சீட்களை பெற்றுது. இதில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது வரை தி.மு.க.,வுடன் உரசல் இருந்தது. மேலும் போட்டியிட தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்ற மனக்கசப்பு காரணமாக கட்சி தொண்டர்கள் தங்கபாலு உருவ பொம்மையை எரித்தனர். மேலும் தமிழக காங்., தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனுக்குள் கோஷ்டி சண்டை அரங்கேறியதில் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்ட தவறியது டில்லியில் மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இளைஞர் காங்., நிர்வாகிகளை கட்சியில் இருந்து தங்பாலு நீக்குவதாக நடவடிக்கை எடுத்தார். இதுவும் ராகுல் வரை கொண்டு போய்ச்சேர்க்கப்பட்டது .

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் காங்., - தி.மு.க,. கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து நேரத்தில் பேரிடியாக அ.தி.மு.க., பெருவாரியான சீட்டுகளை அள்ளிக்கொண்டு தனிப்பெரும்பாண்மை பெற்றது. போட்டியிட்ட 63 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களை மட்டும் பிடித்தது. இதனால் படுதோல்விக்கு காரணமாக தார்மீக பொறுப்பேற்று தனது தமிழக காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை சோனியாவுக்கு அனுப்ப உள்ளதாக அவர் கூறினார்.

குழப்பம் ஏற்பட்ட மயிலாப்பூர்: மயிலாப்பூரில் காங்., வேட்பாளராக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி, அறிவிக்கப்பட்டார். இதற்கும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது வேட்பு மனு தள்ளுபடியானதை அடுத்து மாற்று வேட்பாளராக தயாராக பதிவு செய்திருந்த தங்கபாலு வேட்பாளரானார். காங்., தலைவர் மனைவி வேட்பு மனு தள்ளுபடியானது காங்கிரஸ் கட்சியின் கவனக்குறைவாக விமர்சிக்கப்பட்டாலும் , இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கட்சியினர் பேசிக்கொண்டனர். இவர் 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

தேர்தல் முடிவுக்கு முன்னர் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அடிக்கடி சந்தித்து தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்று கூறி வந்த நிலையில் தி.மு.க., - காங்., கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டதை அடுத்தும் கட்சிக்குள் கோஷ்டி பூசல் காரணமாக எழுந்த நெருக்கடிக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தங்கபாலு தற்போது ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார்.

No comments:

print