Sunday, May 15, 2011

ஜெ.வுக்கு பிரதமர்-சோனியா, அத்வானி போனில் வாழ்த்து

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில் அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல் மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

புதுவை வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி:

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற பேரவை அமையப் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக 5 இடங்களிலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை 15 இடங்களிலும் வெற்றி பெறச் செய்து, ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய புதுச்சேரி மாநில வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அமைப்புகள், சங்கங்கள், மன்றங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், அதிமுகவின் வெற்றிக்காக, அல்லும், பகலும் அயராது உழைத்த என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநில முதல் அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் என்.ஆர்.ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை என்று கூறியுள்ளார்.

No comments:

print