Saturday, March 26, 2011

இதுவரை 2401 பேர் வேட்புமனு : மனு தாக்கல் இன்று முடிகிறது

சென்னை: தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. முதல்வர் கருணாநிதி மற்றும் பல கட்சி தலைவர்கள் உட்பட 2401 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்றுடன் (26ம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் முடிகிறது. 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. 30ம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 13ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.

முதல்வர் மு.கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 1052 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2401 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 127 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. முக்கிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதால், ஒரு சில சுயேட்சைகள் மட்டுமே வேட்பு மனு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து விட்டதால், தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் கருணாநிதி வேட்பு மனுத்தாக்கல் முடிந்தவுடன் பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா திருச்சியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கிறார்.

துணை முதல்வரும் புதுக்கோட்டையில் தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, மேற்கு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமக தலைவர் சரத்குமார், நடிகர் கார்த்திக் ஆகியோரும் தமிழகம் முழுவதும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

No comments:

print