Monday, March 28, 2011

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏப்.3ல் தபால் ஓட்டு போடலாம்

நெல்லை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏப்ரல் 3ல் தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது. இன்று  வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. குறுகிய கால அவகாசமே உள்ளதால் தேர்தல் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த முதுகலை ஆசிரியர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை 10 தொகுதிகளிலும் 11 ஆயிரத்து 500 அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபட தேவையான முதல் கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. 2வது கட்ட பயிற்சி வரும் ஏப்ரல் 3ல் அளிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 12ம் தேதி மதியம் முதல் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பொறுப்பேற்க வேண்டியுள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக ஏப்ரல் 3ம் தேதி பயிற்சி நாளன்றே தபால் ஓட்டுகளை போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 450 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வகையில் லேப்டாப்கள் தேர்தல் பிரிவு மூலம் வழங்கப்படுகிறது. இது சம்பந்தமான சோதனை பணிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக அந்தந்த ஓட்டுப்பதிவு மையங்களில் லேப்டாப்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

print