சென்னை: பணம் பறிமுதல் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷன் ஏப்ரல் 5&ம் தேதி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13&ம் தேதி நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் பல இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதிகளவில் கொண்டு செல்லப்படும் பணம், நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் பணம் பறிமுதல் தொடர்பான தேர்தல் விதிமுறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐகோர்ட் வக்கீல் பட்டிஜெகநாதன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் இன்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, ‘பணம் பறிமுதல் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. சட்டப்படி மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்ற பிறகே வாகன சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்ய வேண்டும்.
தேர்தல் கமிஷன் உள்நோக்கத்துடன் திமுகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சர்வாதிகாரி போல் செயல்படுகிறது. பணம் பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்றார். தேர்தல் கமிஷன் சார்பாக மூத்த வக்கீல் ராஜகோபால் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். வழக்கு தாக்கல் செய்த பட்டிஜெகநாதன் வருமான வரித்துறை வக்கீலாக இருக்கிறார். வாகன சோதனையின் போது வருமானவரிதுறை அதிகாரிகளும் உடன் இருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். வக்கீல் ஜோதி குறுக்கிட்டு, ‘ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருக்கு ராஜகோபால் ஆஜராகி வருகிறார். இப்படிப்பட்டவர் இந்த வழக்கில் எப்படி நியாயமாக செயல்பட முடியும்’ என்றார். 1993&ம் ஆண்டு முதல் தேர்தல் கமிஷன் வக்கீலாக தான் ஆஜராகி வருவதாக ராஜகோபால் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘வக்கீல்கள் மோதிக்கொள்ள வேண்டாம். தேர்தல் கமிஷன் ஏப்ரல் 5&ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment