Sunday, March 27, 2011

மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா-ராமதாஸ் கிண்டல்

பரமத்திவேலூர்: ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் கவுண்டரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பரமத்திவேலூரில் பிரசாரம் செய்தார்.

அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,

இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அடித்தட்டு மக்களை கேட்டால் உடனே திமுக தான் என்பார்கள். அந்த அளவுக்கு திமுக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதை காப்பியடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும். ஆனால் ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுவதோடு சரி. அதை எப்பொழுதுமே நிறைவேற்றமாட்டார். திமுக அரசை பாமக எப்பொழுதும் ஆதரிக்கும். எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் திமுக அரசுக்கு உறுதுணையாக நிற்போம். எந்தகாலத்திலும் நாங்கள் அமைச்சர் பதவி கேட்க மாட்டோம் என்றார்.

No comments:

print