Thursday, March 31, 2011

விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக்கங்க: ஸ்டாலின் வேண்டுகோள்

ஆழ்வார்குறிச்சி: 'நடிகர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தயவு செய்து ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடையம் ஒன்றிய பகுதிகளில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பூங்கோதைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் உங்களை தேடி வருபவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுபவர் கருணாநிதி. கொடநாட்டை பற்றி கவலைப்படுபவர் ஜெயலலிதா.

தேர்தல் அறிக்கையை கருணாநிதி ஒன்றரை மணிநேரம் படித்து வெளியிட்டதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதி உண்மையானவை. மக்களை பற்றியே சிந்திப்பவர் கருணாநிதி. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு கதாநாயகன் என அவர் கூறினார்.

தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் கதாநாயகி என கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது முன்னாள் கதாநாயகியும், முன்னாள் கதாநாயகரும் உலா வருகின்றனர்.

பதவிக்காக அலைபவர் கருணாநிதி அல்ல. அவர் பார்க்காத பதவி இல்லை. இந்த தள்ளாத நிலையிலும், உடல் நலக் குறைவிலும் தொடர்ந்து மக்களை சந்திப்பது ஏன்? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைத் தீட்டி அதனை செயல்படுத்துபவர். உங்களிடம் ஆதரவு கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

சொன்னதை செய்ததால் உரிமையுடன் ஆதரவு கேட்கின்றோம். 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த சாதனையை உங்களிடம் கூறுகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் 3 முட்டையில் இருந்து 5 முட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் நிதியுதவி இதேபோல பல நல்ல திட்டங்களை செய்த நாங்கள் இந்த முறை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.

முன்பு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கிய நாங்கள் இப்போது அதனை 4 லட்சமாக உயர்த்த உள்ளோம். அதிலும் 2 லட்சம் அரசு மானியமாகப் போகிறது. 2 லட்சத்தை கட்டினால் போதும். இதுபோன்று செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பூங்கோதைக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் தலைவருடன் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீங்கள் கூட "டிவி'யில் பார்த்திருப்பீர்கள். கட்சித் தலைவர் கையில் அடி உதை படும் வேட்பாளர்களை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா? என்றார்.

ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம், மாதாபுரம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

No comments:

print