Sunday, March 27, 2011

ஜெயிக்க முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை-புதிய நீதிக் கட்சி

சென்னை: தங்களால் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று புதிய நீதிக் கட்சி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.


தனித்துப் போட்டியிட்டால் தாங்கள் மட்டுமல்ல எந்தக் கட்சியுமே வெற்றி பெற முடியாது என்பதால் அதை உணர்ந்து தாங்கள் போட்டியிடவில்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளது அக்கட்சி.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி, கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுவதென்று தீர்மானித்தது. அனைத்து முதலியார்கள் (செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர், பிள்ளைமார், சேனைத்தலைவர்) சுமார் 2 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கிற புதிய நீதிக்கட்சிக்கு, தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும் இணைந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

ஆனால், இந்த இரண்டு கூட்டணியிலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, நாடார் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, முக்குலத்தோர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, முஸ்லீம் சமுதாயத்தினர் நடத்தும் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர் சமுதாயத்தலைவர் நடத்துகிற பாட்டாளி மக்கள் கட்சிக்கு கூட்டணியில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலியார் சமுதாய கட்சி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு உள்ள சூழ்நிலையில், தனித்து போட்டியிட்டு எந்தவொரு கட்சியும் வெற்றிபெற முடியாது என்கிற நிலையில், புதிய நீதிக்கட்சி இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெறுவது எளியதல்ல என்பதால், இரு கழக கூட்டணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வெற்றிக் கனியை ஈட்டவும், ஆட்சியை பிடிக்கவும் இரு கழக கூட்டணித் தலைவர்கள் எண்ணற்ற சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

அனைத்து முதலியார், வேளாளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திட வேண்டும். அல்லது கல்வி, வேலைவாய்ப்பில் மேற்கண்ட பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று எந்த கூட்டணி அறிவிக்கிறதோ, அந்த கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள புதிய நீதிக்கட்சி அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப்பேரவை நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் முதலியார் சமுதாய மக்களும் அயராது பணியாற்றி வெற்றிக்கனியை ஈட்டி தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

print