Monday, March 28, 2011

லஞ்சம் கொடுத்து சீட் பெற்ற இ., கம்யூ., வேட்பாளர்;தா.பாண்டியன் பணம் பெற்றதாக தொண்டர்கள் புகார்

ஓசூர்: ஓட்டுக்குத்தான் காசு கொடுப்பார்கள், வேலை வாங்க காசு கொடுப்பார்கள், இங்கே வேட்பாளரே ஒருவர் கட்சி நிர்வாகிக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்து தேர்தலில் நிற்க சீட் வாங்கியிருக்கிறார் இந்திய கம்யூ., கட்சி எம்.எல்.ஏ., இதனால் அதிருப்பதியுற்ற இக்கட்சி பிரமுகர்கள் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தளி சட்டசபை தொகுதியில் 50 லட்சம் கொடுத்து "சீட்' வாங்கி வந்த "சிட்டிங்' எம்.எல்.ஏ., ராமச்சந்திரனை தோற்கடிக்க தி.மு.க., வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாகராஜ் ரெட்டி கோஷ்டியினரும், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் கோஷ்டியினரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். கட்சி தலைமை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாகராஜ்ரெட்டி கோஷ்டியினர் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவார்கள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் நாகராஜ் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நான் தளியில் போட்டியிட்டேன். சி.பி.எம்., கட்சியில் இருந்த ராமச்சந்திரன் "சீட்' கிடைக்காத அதிருப்தியில் என்னை எதிர்த்து கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டார். அதனால், நான் வெறும் 2,500 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தேன். கூட்டணி தர்மத்தை மீறிய குற்றத்திற்காக ராமச்சந்திரனை சி.பி.எம்., கட்சியை விட்டு வெளியேற்றியது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்த ராமச்சந்திரனையும், அவரது மாமனார் லகுமையாவையும் எந்த பரிசீலனையும் செய்யாமல் மாநில செயலாளர் தா.பாண்டியனும், துணை செயலாளர் மகேந்திரனும் தன்னிச்சியாக முடிவு செய்து கட்சியில் சேர்த்தனர். இது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முத்து, கூடுமியான உள்ளிட்ட தியாக தலைவர்கள் ரத்தம் சிந்தி ஏராளமான இளைஞர்களை கட்சியில் சேர்த்து கட்சியை வளர்த்தனர். தற்போது இந்த கட்சியை பண பலத்தை பயன்படுத்தி ராமச்சந்திரனும், லகுமையாவும் ஆக்கிரமித்து விட்டனர். இதனால், உண்மையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய நிர்வாகிகள், தொண்டர்கள் மதிக்கப்படவில்லை. நல்லக்கண்ணு செயலாளராக இருந்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் இருந்தது. தா.பாண்டியனும், மகேந்திரனும் தங்களுடைய சுயநலத்திற்காக அ.தி.மு.க., கூட்டணியில் கிடைத்த பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்.

ராமச்சந்திரனை தோற்கடிக்க பிரசாரம்: தளி தொகுதியில் ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்க கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை. தா.பாண்டியனும், மகேந்திரனும் 50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவித்து விட்டனர். அதனால், இந்த தேர்தலில் ராமச்சந்திரனை தோற்கடிக்க அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பிரகாஷை ஆதிரிக்க முடிவு செய்துள்ளோம். அவரை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், கம்யூனிஸ்ட் கொள்கை இல்லாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதை விரும்பவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள 23 மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட 300 கிளைகளை கலைத்து கட்சியில் விலகி உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

print