Sunday, March 27, 2011

சட்டப்படி குற்றம் பார்த்து விட்டு ஓட்டுப் போடுங்கள்-எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை

சென்னை : வாக்காளர்களே, வாக்களிக்கச் செல்லும் முன்பு சட்டப்படி குற்றம் படத்தை ஒரு முறை பார்த்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது புரியும் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநரான நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரன்.


இதுகாலம் வரை திமுககாரராக அறியப்பட்ட எஸ்.ஏ.சி. சமீபத்தில் அதிமுக ஆதரவாளராக மாறினார். காரணம், அவரது மகன் நடிகர் விஜய்க்கு திமுக தரப்பில் கடும் நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதால் என்று கூறப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரத்தில் ஈடுபடுவார், அவரது இயக்கத்திற்கு சீட் தரப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. சந்திரசேகரும், ஜெயலலிதாவை சில முறை சந்தித்துப் பேசினார். இருப்பினும் இடையில் அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட பெரும் குழப்பத்தால் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.

இதையடுத்து அதிமுகவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துக் களம் இறங்கவில்லை விஜய். மாறாக தனது ரசிகர் மன்றத்தினரிடம் அதிமுக ஆதரவாக செயல்படுமாறு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்திரசேகர் இயக்கியுள்ள சட்டப்படி குற்றம் திரைக்கு வந்துள்ளது. இதுகுறித்து தனியார் டிவிக்கு சந்திரசேகர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஓட்டு போடப்போகும் முன்பு இந்த சட்டப்படி குற்றம் படத்தை பார்த்துவிட்டு செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது புரியும் என்றார்.

விஜய், அஜீத், விஜயகாந்த் ரசிகர்கள் காப்பார்கள்-சத்யராஜ்

இதே பேட்டியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் கூறுகையில், நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வள்ளல் படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத் தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.

அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள். ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம் என்றார் சத்யராஜ்.

No comments:

print