Monday, March 7, 2011

கூட்டணி முறிவுக்கு தி.மு.க., மீது காங்., குற்றச்சாட்டு : தனித்து போட்டியிட தயாராகிறது

தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரசில் ஏற்பட்ட முறிவு, சரிசெய்ய முடியாத அளவிற்கு முற்றி விட்டதால், காங்கிரஸ் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., மத்திய அமைச்சர்கள், பதவியிலிருந்து ராஜினாமா செய்வார்கள் என அறிவித்து 24 மணி நேரமாகியும் இரு கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை என்பதிலிருந்து, உறவுகள் முற்றிலும் முறிந்து விட்டதற்கு அடையாளம் என்றும், உறவு முறிந்ததற்கு தி.மு.க., தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


இது தொடர்பாக டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:தொகுதி பங்கீடு முதல் கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு தர தி.மு.க., மறுத்து விட்டது. காங்கிரஸ் கட்சியோடு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் செய்த பிறகு தான் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என, தி.மு.க., சார்பில் உறுதியளிக்கப்பட்டது.ஆனால், காங்கிரஸ் தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் முதல் மரியாதை செய்யப்பட்டது. பா.ம.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தான் நாங்கள் அனுமதி வழங்கியிருந்தோம்.ஆனால், அவசர, அவசரமாக தி.மு.க., தலைமை, ராமதாசுடன் உடன்பாடு செய்து விட்டு, காங்கிரசுக்கு கொடுக்க போதுமான சீட்டுகள் இல்லை என, கைவிரித்து விட்டது. அகில இந்திய காங்கிரசின் தமிழக பொறுப்பாளர் குலாம் நபிஆசாத், தி.மு.க., தலைமையோடு தொகுதி உடன்பாடு குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியபோது காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 63 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தி.மு.க., முதலில் 57 தொகுதிகளை தருவதாகவும், பின் 60 தொகுதிகளாக உயர்த்தி கொடுக்கவும் முன்வந்தது. இந்த 60 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்போகிறீர்கள் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு பதிலாக, மத்திய அரசிடமிருந்து தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது. நேற்று, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் பா.ம.க., தொகுதி பங்கீடு குழுவினர் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. உறவு முறிந்ததற்கு தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட பிரச்னைகள் மட்டும் காரணமல்ல.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரித்து வரும் சி.பி.ஐ., ராஜாவுடன் நெருங்கியவர்களை இன்னும் சில நாட்களில் விசாரிக்க இருக்கிறது. இதனால் தான், தொகுதி உடன்பாட்டில் முறிவு என்று காரணம் காட்டி, தி.மு.க., உறவை முறித்து விட்டது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

print