Thursday, March 17, 2011

30 தொகுதிகளில் தனித்து போட்டி : நடிகர் கார்த்திக்

சென்னை: சென்னை உள்ளிட்ட 30 தொகுதிகளில் தனது கட்சி தனித்து போட்டியிடுவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார். நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் அளித்த பேட்டி; தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில், எங்களின் நாடாளும் மக்கள் கட்சி முதலில் அங்கம் வகித்திருந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கோ, தொகுதி பங்கீட்டுக்கோ அவர்கள் எங்களை அழைக்கவில்லை. எங்களை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள். இதேபோல், மக்களையும் ஏமாற்றி விடக்கூடாது. என்ன நடந்தது என்பது குறித்து ஜெயலலிதாவுக்கு 4 பக்க விளக்க கடிதம் எழுதியுள்ளேன். நாடாளும் மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 40 தொகுதிகளை பரிசீலனை செய்து வருகிறோம். இதில் 25 முதல் 30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் போட்டியிடுவோம். சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில், எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். நாளை முதல் எனது இல்லத்தில் நேர்காணல் நடைபெறும்.

இன்னும், ஒரு சில நாட்களில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் போன்ற தொகுதியில், ஏதாவது ஒன்றில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து பிரசாரம் தொடங்கும். முதல் வேட்பாளராக ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவேன். இவ்வாறு கார்த்திக் கூறினார். கூட்டணி என்றாலே அலர்ஜி: வைகோ அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உங்களை கூட்டணிக்கு கூப்பிட்டால் போவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “வைகோ நல்ல மனிதர், அவர் அழைத்தால் பரிசீலனை செய்வோம். எனினும், எங்களுக்கு கூட்டணி என்றாலே அலர்ஜி’’என்றார்.

No comments:

print