Thursday, March 17, 2011

30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு

நெல்லை: சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பெயர் சேர்க்கை நேற்றுடன் நிறைவடைந்தது. மார்ச் 30ம் தேதிக்குள் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஒரே தொகுதிக்குள் மாற்ற பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர் அட்டையை தவற விட்டவர்கள், அட்டை கிழிந்தவர்கள் நகல் அட்டை பெறவும், மார்ச் 5, 6 மற்றும் 12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 1.1.2011ம் தேதியன்று 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற விண்ணப்பம் அள¤த்தனர். பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளான நேற்று, ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர். இந்த விண்ணப்பங்கள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

பின்னர், அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களால் வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்வதற்கான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும். அதன் பிறகு கம்ப்யூட்டரில் அனைத்து பதிவுகளும் மேற்கொள்ளப்படும். இந்த அனைத்து பணிகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 26ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். 30ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதி பட்டியலும் வெளியிடப்படும். அப்போது, புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும். எனவே, 30ம் தேதிக்குள் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளை முடித்து பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

print