தே.மு.தி.க.,வில் மகளிர் அணிக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, விஜயகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், 13 தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு கொடுத்துள்ள தே.மு.தி.க., பெண் நிர்வாகிகள், காத்திருக்கின்றனர்.
கடந்த 2005 செப்., 14ம் தேதி, நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.,வை துவக்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். தே.மு.தி.க.,வில் இளைய தலைமுறையினர் அதிகளவில் உள்ளனர். அதுபோல மகளிரையும் தங்கள் கட்சியில் அதிகம் சேர்க்க விஜயகாந்த் விரும்பினர். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தங்கள் கட்சியில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதுபோல கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஏராளமான பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிடுகிறது. தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் போட்டியிட விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் இருந்து, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, 7,600 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் மகளிர் அணி மாவட்ட செயலர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பெண் நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். தே.மு.தி.க., மொத்தம், 41 தொகுதிகளில் போட்டியிடுவதால், விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி மகளிருக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், 13 தொகுதியை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால், தே.மு.தி.க., சார்பில், 28 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 13 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவர். தமிழகத்தில் மொத்தம், 32 மாவட்டம் உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு ஆண் வேட்பாளர் நிறுத்தி விட்டு, மீதமுள்ளதொகுதிகளில் பெண் வேட்பாளருக்கு விஜயகாந்த் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தே.மு.தி.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
வரும் 11, 12, 13 ஆகிய மூன்று நாள் விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து விஜயகாந்த் நேர்காணல் நடத்துகிறார். அதில், விருப்பமனு கொடுத்த பெண் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். நேர்காணலின் போது, 33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், சீட் ஒதுக்க, விருப்ப மனு கொடுத்த பெண் நிர்வாகிகள் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment