Thursday, March 10, 2011

பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: ""தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற முடிவு இன்று அல்லது நாளை தெரிந்து விடும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


சென்னையில் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., போன்ற மருத்துவ மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் வேளையில், சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை கண்டித்து தமிழ் மாணவர்கள் சங்கம் சார்பில் நாளை (இன்று) முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தாசில்தார், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. சமூக நீதிக்கு நுழைவுத் தேர்வு வேட்டு வைத்து விடும்.

இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த மாணவர்களும் முன்வர வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த முடியாது என்று சொல்லியிருந்தாலும், எந்த ஆண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்த கூடாது. அப்படி நடத்தினால், கடுமையான விளைவுகள் நடக்கும். போராட்டம் நடத்தப்படும். எந்த தேதியில் போராட்டம் என்பதை விரைவில் அறிவிக்கப்படும்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் படித்து தேர்வு பெறுகின்றனர். அவர்கள் வக்கீலாவதற்கு மறுபடியும் தேர்வு எழுதுவது தேவையற்ற ஒன்று. தமிழக வக்கீல்கள் தேர்வு எழுதாமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற பொதுவான நன்மை கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்துள்ளோம். இரு கட்சிகளுக்கிடையே தேர்தல் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட பின் திருத்தம் செய்வது இதுதான் முதல் முறை. காங்கிரஸ் - தி.மு.க., தொண்டர்கள் இணைந்து செயல்படுவர். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த முடிவு இன்று (நேற்று) இரவு அல்லது நாளை தெரிந்து விடும். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் மாறலாம். மாறாமலும் இருக்கலாம். பா.ம.க., தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. தேர்தல் பிரசாரம் குறித்து முதல்வர் தலைமையில் பேசுவோம். அப்போது அவர் வழிகாட்டுவார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments:

print