சென்னை: ""காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள 63 தொகுதிகளை, பக்தி மனம் கமழ, அவர்கள் வரவேற்பார்கள், ஏனெனில் 63 நாயன்மார்கள் புராணத்தில் உள்ளனர் '' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதற்காக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து தலா ஒரு தொகுதியை, விட்டுக் கொடுத்த பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு கருணாநிதி நன்றி தெரிவித்து கொண்டார். கடந்த நான்கு நாட்களாக காங்கிரஸ் சீட் ஒதுக்கீடு குறித்த கசப்புணர்வு, நேற்று மாலையில் முடிவுக்கு வந்ததை அடுத்து இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தே.மு.தி.க., விலிருந்து விலகி, அக்கட்சியின் மாவட்ட செயலர் முருகன் தலைமையில் 3,000 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
இவர்களை வரவேற்று கருணாநிதி பேசியதாவது: சட்டசபைத் தேர்தலில், திமுக சார்பில், போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில், இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் நமக்கு கிடைத்து உள்ளது. ஒன்று, தே.மு.தி.க.,விலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நம்முடன் இணைகின்றனர். இரண்டாவது, தி.மு.க. - காங்கிரஸ் - பா.ம.க. - விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தல் உடன்பாட்டை முழுமையாக முடித்துள்ளன. இதன்படி, தி.மு.க., 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பா.ம.க., 30 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும், கொ.மு.க., 7 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், மூ.மு.க., ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணி ஏற்பட்டு விடக்கூடாது என்று ஆத்திரத்துடனும், கோபத்துடனும் செய்திகளை வெளியிட்டனர். அவர்களுக்கு நல்ல பதிலாக இந்த கூட்டணி உருவாகியுள்ளது. பலத்தோடு பலம் சேர்ந்துள்ளன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தோழமை உணர்வு, நட்புக்கரம் நீட்டுதல் ஆகியவற்றுக்கு சான்றாக, பா.ம.க., தனக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியையும், முஸ்லீம் லீக் தனக்கு ஒதுக்கிய மூன்று தொகுதியிலிருந்து, ஒரு தொகுதியையும் விட்டுக் கொடுத்து, காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க உதவியுள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காங்கிரசார் 63 தொகுதிகளை பக்தி மனம் கமிழ வரவேற்பார்கள். ஏனென்றால், 63 நாயன்மார்கள் புராணத்தில் உள்ளனர் என்று கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment