Thursday, March 10, 2011

ஜெ., ரகசியமாக நடத்தும் அ.தி.மு.க., நேர்காணல்: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முன்பே, அதிரடியாக நேர்காணலை துவங்கியுள்ளது அ.தி.மு.க., தொகுதிக்கு மூன்று பேர் என்ற அடிப்படையில் மாவட்டவாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஜெயலலிதா நேரடியாக ஈடுபட்டுள்ளார்.


அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் - நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இதுவரை இறுதி செய்யப்படவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு உறுதியான பின், நமது பங்கீட்டை இறுதி செய்யலாம் என ஜெயலலிதா தெரிவித்திருந்ததால், இக்கட்சிகள் அமைதி காத்திருந்தன. தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு நேற்று முன்தினம் இறுதியானது. உடனடியாக, அ.தி.மு.க., தலைமை தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாத கட்சிகளை அழைத்து, பங்கீட்டை முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பில் அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த இரு நாட்களாக நீடித்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க., தலைமையிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. தி.மு.க., அணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், வேறு எங்கும் போக முடியாத, இக்கட்டான நிலைக்கு இந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அ.தி.மு.க., தலைமை, ரகசியமாக நேர்காணலை துவக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலர் பரிந்துரையின் பேரில் தொகுதிக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் அனுப்பியுள்ளனர். தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யும் பணியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், மாவட்டச் செயலரால் பரிந்துரைக்கப்பட்டவர்களை அழைத்து பேசி வருகின்றனர். அதோடு, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில், தகுதியானவர்களை இக்குழுவினர் தேர்வு செய்து, அவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும், சென்னையில் குழுவினரை சந்திக்கின்றனர். அவர்களிடம், தொழில், கட்சிப்பணி, எவ்வளவு செலவு செய்வீர்கள், ஜாதி பின்னணி, போராட்டங்களில் ஈடுபட்ட வரலாறு என, முழு விவரங்களும் கேட்டறியப்படுகிறது. தனித் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்கள், குறிப்பிடப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர்தானா என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த குழு தகுதியானவர்கள் என பரிந்துரைக்கும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து வருகின்றனர். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் மூன்று பேர் நேர்காணலுக்காக ஜெயலலிதாவை சந்திக்க அனுப்பப்படுகின்றனர்.

கடந்த 4ம்தேதி அமாவாசை நாளன்று இந்த நேர்காணல் துவங்கியது. புதிதாக உருவாகியுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அன்று நேர்காணலில் பங்கேற்றனர். 80க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஒன்பது பேர் மட்டும் நேர்காணலில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் போயஸ்கார்டனில் நடந்த நேர்காணலில் பங்கேற்றனர். ஒவ்வொருவராக அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். "கட்சியில் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்கள்; எந்த ஜாதியைச் சேர்ந்தவர்; தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும்?' என்பதுபோன்ற கேள்விகளை கேட்டதாகவும், யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என, அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில், அ.தி.மு.க., போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கும் நேர்காணல் நடந்து வருகிறது. இதுவரை 15 தொகுதிகளுக்கு மேல் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. ரகசியமாக நேர்காணல் நடப்பதால், அ.தி.மு.க., பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "உங்களுக்கு அழைப்பு வந்ததா' என விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்த வண்ணம் உள்ளனர். விலைபோகாத, கட்சிக்கு விசுவாசமான வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்பிய ஜெயலலிதா, இந்த முறையை கடைபிடித்துள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புது முகங்களுக்கு வாய்ப்பு! சட்டசபை தேர்தலில், 140 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ள அ.தி.மு.க., அதில், குறிப்பிட மாவட்ட செயலர்கள், "சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள், சீனியர் பிரமுகர்களுக்கான தொகுதிகளை அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால், இந்த தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகள், தனித் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய தற்போது நேர்காணல் நடக்கிறது. இத்தொகுதிகளில் தகுதியான புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அடுத்ததாக கடும் போட்டி இருக்கக்கூடிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது.

No comments:

print