Thursday, March 10, 2011

ஒரு நிமிடத்தில் முடிந்த தி.மு.க.,நேர்காணல்கள்

திருநெல்வேலி : காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,நேர்காணல் நடத்தவில்லை. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான தி.மு.க.,வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தி.மு.க.,தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

சில தொகுதிகளில் உள்கட்சி போட்டி காரணமாக ஒரே நபர் பலருக்கு பணம் செலுத்தி வட்டச்செயலாளர்களையும் நேர்காணலுக்கு வரவழைத்திருந்தனர். நேர்காணல் அதிகபட்சம் ஒரு நிமிடம்தான். "நீங்க என்ன ஜாதி..?, எவ்வளவு செலவழிக்க முடியும்..' என இரண்டே கேள்விகள்தான்.

பாளையங்கோட்டைக்கு அதிகபட்சமாக 107 பேர் ஏலம் கேட்டிருந்தார்கள். நெல்லையில் நடந்த ஒரு கூட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட போவதாக கிளப்பி விடப்பட்டதால் எதற்கும் இருக்கட்டுமே என அவரது பெயருக்கும் சிலர் பணம் செலுத்தி வைத்திருந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட நாங்குநேரி, கடையநல்லூர் தொகுதிகளை அவர்களுக்கே மீண்டும் தருவதாக ஒப்புக்கொண்டிருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு தி.மு.க.,நேர்காணல் நடத்தவில்லை.


தோழமை கட்சியின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என கூறி அனுப்பிவைத்தனர். 2006 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 48 தொகுதிகளை அப்படியே மீண்டும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என பரவலாக 63 தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளது. தி.மு.க.,வில் இந்தமுறை புதிய நபர்களுக்கு சீட் கொடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.

மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் மீண்டும் சீட் வழங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தி.மு.க.,தலைவர் கருணாநிதி நேர்காணலில் முழுமையாக கலந்துகொண்டது கட்சியினருக்கு திருப்தியளிப்பதாக இருந்தது.

No comments:

print