Wednesday, March 16, 2011

டாட்டா காட்டியது தி.மு.க., : நாளை பட்டியலில் அதிரடி

சென்னை : நாளை வெளிவரவுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், சில மந்திரிகளுக்கு, "சீட்' கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதனால், தி.மு.க., அமைச்சர்கள் பலர், கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்களுக்கு புதிதாக அமைய உள்ள மேலவையில் இடம் அளிக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், தி.மு.க., கூட்டணி முந்திக் கொண்டு, முதல் கட்டமாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல், தன் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து விட்டது. தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.
இதில், பல எம்.எல்.ஏ.,க்களுக்கும், ஒரு சில அமைச்சர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. குறிப்பாக, அமைச்சர்கள் கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா ஆகியோர், வாய்ப்பு மறுக்கப்படுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அதுபோல், ஆலந்தூர் தொகுதி மறுக்கப்பட்டுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு ஆகியோரின் தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. ஆனால், இதில் சில அமைச்சர்கள், வேறு தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசியக் கட்சியான காங்கிரசுக்கு தலைநகரான சென்னையில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டது. அதனால், இந்த முறை சென்னையில் ஐந்து தொகுதிகளையாவது கேட்டுப் பெற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினர். அவர்கள் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., வேறு வழியின்றி சென்னையில், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், ராயபுரம், திரு.வி.க., நகர் ஆகிய ஐந்து தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

இந்த தொகுதிகளில், அ.தி.மு.க., கடந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றதாலும், மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகளில் பிராமணர் ஓட்டு வங்கி அதிகம் இருப்பதாலும், இந்த தொகுதிகள் காங்கிரசுக்கு தள்ளி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர் ஆகிய தொகுதிகளில் படித்தவர்கள் அதிகம் இருப்பதாலும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரம் இங்கு பெரிதாக எதிரொலிக்கும் என கருதப்படுவதும், இந்த தொகுதிகளை தி.மு.க., கைவிட்டதற்கு மற்றொரு காரணம்.இதே போல், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள், அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளாக உள்ளன. மற்ற தொகுதிகள், ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற, போட்டியிட்ட தொகுதிகளாக உள்ளன.

அ.தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டு வங்கி உள்ள தொகுதிகள், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், அக்கட்சித் தொண்டர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். இது, வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு : தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க,வில் இருந்து வெளியேறிய நடிகர் கார்த்திக்கின், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.எனவே, அக்கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதால், இன்று (மார்ச் 16) வெளியிடப்படுவதாக இருந்த தி.மு.க., வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 17) வெளியிடப்படும் என்று தி.மு.க., தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

print