Tuesday, March 8, 2011

ஆட்டம் கண்ட கூட்டணி : உற்சாகத்தில் புதுச்சேரி தி.மு.க.,

புதுச்சேரி : புதுச்சேரியில் கடைசியாக, கடந்த 96ம் ஆண்டில் ஆட்சியை தி.மு.க., கைப்பற்றியது. பின், 99ல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தி.மு.க., அமைச்சரவை ராஜினாமா செய்தது. அதற்கு பின் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.,வால் உட்கார முடியவில்லை., கடந்த 12 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே தி.மு.க., அமர்ந்து வருகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக காங்., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாததால், தி.மு.க., தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தொண்டர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் மன ரீதியாக தளர்ந்துவிட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில் காங்., கட்சியும், தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்., 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனி மெஜாரிட்டி கிடைக்காத போதும், ஆட்சிக் கட்டிலில் காங்., அமர்ந்தது. காங்., கட்சியில் வெற்றி பெற்ற 10 எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவியில் அமர்ந்தனர். ஆனால், ஏழு எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள தி.மு.க., "வெளியில் இருந்து' ஆதரவு அளித்து வருகிறது.

புதுச்சேரி காங்., ஆட்சியில் தி.மு.க., பங்கேற்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து இங்குள்ள தி.மு.க.,வினர் ஓய்ந்து விட்டனர். புதுச்சேரி காங்., ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டால், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், காங்., பங்கு கேட்கும் என்பதால் தி.மு.க., மேலிடம் எதையும் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையில், அமைச்சர் பதவி தராவிட்டாலும் பரவாயில்லை, "அட்லீஸ்ட்' வாரியத் தலைவர் பதவியாவது கிடைக்குமா என்ற நப்பாசையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி எடுத்தனர். இதற்கும், "கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை இதில் வேடிக்கை என்னவென்றால், காங்., ஆட்சியை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு "பசை' அதிகமுள்ள வாரியத் தலைவர் பதவிகள் வாரி வழங்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, மிகுந்த மனப் புழுக்கத்தில் புதுச்சேரி தி.மு.க.,வினர் இருந்தனர். காங்., தி.மு.க., கூட்டணி உடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்களும் உண்டு. இது போன்ற சூழ்நிலையில் காங்.,- தி.மு.க., இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட தகவல் புதுச்சேரி தி.மு.க.,வினரின் காதில் தேனாக பாய்ந்துள்ளது. தங்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது என்று தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

No comments:

print