Friday, March 11, 2011

காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி : இன்று மீண்டும் பேச்சு

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக, தி.மு.க., குழுவினருடன் காங்கிரஸ் ஐவர் குழு, நேற்று இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தி.மு.க., போட்டியிட்ட பல தொகுதிகளை, காங்கிரஸ் கேட்பது தான் இழுபறிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை மீண்டும் இரு கட்சி குழுவினரும் பேசுகின்றனர்.



தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பின் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீட்டுக்கு அடுத்ததாக, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சி குழுவினரிடையே நேற்று காலை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. காலை 10.30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, ஒன்னேகால் மணி நேரம் நீடித்தது. "கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும், இந்தத் தொகுதிகளில், தொகுதி சீரமைப்பினால் விடுபட்ட தொகுதிகளுக்கு, மாற்றுத் தொகுதிகளை அளிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டது. காங்கிரசுக்கு, கூடுதலாக ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் பட்டியலை, காங்., ஐவர் குழு, தி.மு.க., குழுவிடம் அளித்தது. அப்போது, பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும், தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் தி.மு.க., ஐவர் குழு பரிசீலித்தது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்களை, காங்கிரஸ் குழுவிடம் தெரிவித்த, தி.மு.க., குழு, மாற்றுத் தொகுதிகளை அளிக்குமாறும் காங்கிரஸ் குழுவிடம் கேட்டுக் கொண்டது.

ஆனால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில், தி.மு.க.,போட்டியிட்ட இடங்களும், பா.ம.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளும் அதிகமாக இருந்ததால், முதல் கட்டப் பேச்சில் முடிவு எட்டப்படவில்லை. அதனால், மாலை 5.50 முதல், 6.30 வரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் கேட்கும் ஆறு தொகுதிகள், தி.மு.க., போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்பதால், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. தங்கபாலு, நிருபர்களிடம் கூறும் போது,"நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை, தி.மு.க., - காங்கிரஸ் மட்டும் முடிவு செய்ய முடியாது. கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, நாளை (இன்று) காலை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம்' என்றார்.

No comments:

print