சென்னை: தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யும் அடுத்த கட்ட பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிரசும், தி.மு.க.,வும் விரும்புவதால் நெருக்கடி உருவாகியுள்ளது.
காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட காலதாமதத்தைப் போல், தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக இருக்கிறது. இதற்காக, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பரிசீலித்து அதை முடிவு செய்வதில் தி.மு.க., தீவிரமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளை இம்முறையும் அக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, கூடுதல் தொகுதிகளுக்கு, அடுத்த முக்கியத்துவம் அளிக்க உள்ளனர். தேர்தல் கமிஷனின் தொகுதி சீரமைப்பினால், சில தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. சில புதிய தொகுதிகள் உருவாகியுள்ளன. இதனால், பாரம்பரியமாக இருந்த தொகுதிகளும், சில வி.ஐ.பி., தொகுதிகளும் விடுபட்டுள்ளன. இவற்றுக்கு மாற்றுத் தொகுதிகள் தேடுவதிலும் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் தனி கவனம் செலுத்துகின்றனர். தனித் தொகுதிகளை பிற கட்சிகளுக்கு தள்ளிவிட்டு, பொதுத் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதில் பல கட்சிகள் உஷாராக உள்ளன. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் விகிதாச்சாரம் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும், சில கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் மட்டும் அதிகத் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சிகள் விரும்புகின்றன. அதனால், மற்ற கட்சிகளுக்கு அந்த மாவட்டங்களில் தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தொகுதிகளை ஒதுக்குகின்றனர். கட்சி மாறி வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதில் பிற கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், தொகுதிப் பங்கீட்டுக் குழு கவனமாக உள்ளது. வி.ஐ.பி., தொகுதிகளை பட்டியலிட்டு, அதை மற்ற கட்சியினர் கேட்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகுதியைப் பெறுவதில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும்போது, குலுக்கல் முறையில் ஒரு கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளனர். பா.ம.க., - விடுதலைச் சிறுத்தை - கொ.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணியில் கட்சி வாரியாக போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., - 121, காங்., - 63, பா.ம.க., - 30, வி.சி., -10, கொ.மு.க., - 7, முஸ்லிம் லீக் - 2, மூ.மு.க., - 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
No comments:
Post a Comment