Friday, March 11, 2011

பதட்டமான ஓட்டுச்சாவடியில் வெப் கேமிரா:மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல்: ""மாவட்டத்தில் 94 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஓட்டுச்சாவடிகளில், லேப்டாப் வைத்து வெப் கேமிரா மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும்,'' என, மாவட்ட கலெக்டர் மதுமதி பேசினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுமதி தலைமை வகித்து பேசியதாவது:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மண்டலத்தில், 118 மண்டல அலுவலர்கள் நியமக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மின்சார வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகள் இருப்பின் தற்காலிக மின்வசதி ஏற்படுத்திட வேண்டும்.ஓட்டுச்சாவடி கட்டிட நிலைமையையும் ஆராய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக 5,432 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20 சதவீதம் பேர் கூடுதலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலையில், 94 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஓட்டுச்சாவடிகளில் லேப்டாப் வைத்து வெப் கேமிரா மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும். ஓட்டுச்சாவடிகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அதுகுறித்த தகவல்களை தெரியப்படுத்த, அருகில் உள்ள மூன்று வீட்டு உரிமையாளர்களின் ஃபோன் எண்களும் பெறப்பட்டு, தகவல் தொடர்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஓட்டுச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டால் தகவல் பெறமுடியும். மண்டல அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் ஏதேனும் ஓட்டுச்சாவடி மாற்றம் ஏற்பட்டிருந்தால், அதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். மார்ச் மாத இறுத்திக்குள் தேர்தல் அடையாள அட்டை வினியோகிக்கும் பணி நிறைவு செய்ய வேண்டும்.ஓட்டுப்பதிவுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை சரிபார்த்து உரிய காலத்தில் அவற்றை, ஓட்டுச்சாவடி மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தங்கள் பகுதியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக தேர்தல் அலுவலர், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அனைத்து சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

print