Friday, March 11, 2011

தேர்தல் பணியில் 15 ஆயிரம் ஊழியர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வரும் 19ம் தேதி மனுத்தாக்கல் துவங்குகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சியை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 33 நாள் மீதமுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 1,779 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட உள்ளது. ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில், நான்கு அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடியில் மட்டும் 7,116 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் இரண்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 203 பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் பணிக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வராதபோது, மாற்று ஊழியர்களை பணியில் அமர்த்த, ஒவ்வொரு தொகுதிக்கும் 50 பேர் கொண்ட ரிஸர்வ் ஊழியர்கள் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் மொத்தம் 15 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டும்.
முதல் கட்டமாக தேர்தல் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி துவங்குகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது தேர்தல் பணி நியமன ஆணையும், பணி நியமன இடமும் வழங்கப்பட உள்ளது.

No comments:

print