Thursday, March 17, 2011

தொடர்ந்து முதல்வராக சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,

தமிழகத்தில் அதிக ஆண்டுகள் மற்றும் அதிக முறை முதல்வராக இருந்தவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி. ஐந்து முறை வெற்றி பெற்று, 19 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர், எம்.ஜி.ஆர்., தான். அதுமட்டுமன்றி, தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, முதல்வர் பதவியை தக்கவைத்தவரும் அவரே.

எம்.ஜி.ஆர்., 1977, 1980, 1984 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சி புரிந்தார். இதன்படி, இவர் மரணம் அடையும் வரை, பத்தரை ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, காமராஜர், 1954 ஏப்ரல் 13ம் தேதி முதல், 1963 அக்டோபர் 2ம் தேதி வரை, தொடர்ந்து ஒன்பரை ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார்.

மிகக் குறைந்த நாட்கள் முதல்வராக இருந்தவர், ஜானகி. இவர், 1988 ஜனவரி 7ம் தேதி முதல், ஜனவரி 30ம் தேதி வரை, மொத்தம் 23 நாட்களே முதல்வராக இருந்துள்ளார்.

இவரைத் தவிர, வித்தியாசமான முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம் இருந்து கோர்ட் உத்தரவு காரணமாக முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், 2001 செப்டம்பர், 21ம் தேதி, முதல்வராக பதவியேற்றவர் பன்னீர்செல்வம். முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆகி, அமைச்சர் பதவியும் பெற்று, நான்கு மாதங்களிலேயே முதல்வர் பதவிக்கும் வந்தவர் இவர்.

ஆனால், 2002 மார்ச் 2ம் தேதி வரை, ஆறு மாதங்கள் முதல்வராக பதவியேற்ற இவர், சட்டசபையில் ஒரு நாள் கூட முதல்வராக அமரவில்லை. இவர் முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபை கூட்டப்படவேயில்லை. ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின் தான் சட்டசபை கூட்டப்பட்டது. அதே போல, இவர் தலைமையில் அமைச்சரவை கூட்டமும் நடந்ததில்லை.

முதல் முறையாக, தமிழக அரசியல் வரலாற்றில், துணை முதல்வர் பதவி, இந்த ஆட்சியில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

print