Wednesday, March 9, 2011

எந்தெந்த தொகுதிகளில் காங்., போட்டி? முதல்வருடன் தங்கபாலு ஆலோசனை

சென்னை : வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்? என்பது பற்றி முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆலோசனை நடத்தினார். தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்கிரஸ் இறங்கி வரும் என எதிர்பார்த்தது. ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது.

ராஜினாமா கடிதத்துடன் டில்லி சென்ற தி.மு.க. மத்திய அமைச்சர்கள், ராஜினாமா செய்யாமல் அங்கேயே காத்திருந்தனர். இதற்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க. இறங்கி வந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு இன்று சென்னை அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், தங்கபாலுவும் கையெழுத்திட்டனர். பின்னர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தங்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தசந்திப்பிற்கு பின் ‌அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முதல்வருடன் ஆலோசனை செய்தோம். காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு சாதகமான தொகுதிகள் எவை எவை என ஏற்கனவே கண்டறிந்துள்ளோம். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விபரம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டுக் குழு நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின்னர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும், என்றார்.

No comments:

print