Tuesday, March 15, 2011

பொன்முடியின் ஆடிட்டர் வீட்டில் சோதனை!

விழுப்புரம்: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர் வீட்டில் பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மாவட்ட தேர்தல் பணிக்குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையினால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு அன்பளிப்பு ஏதும் வழங்கப்படுகிறதா என்றும், மேலும் பண பரிமாற்றம் கண்காணிப்பு செய்யவும் , மாநிலம் முழுவதும் முக்கிய மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

இந்த வகையில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டு உரிய விசாரணை நடந்து வருகிறது. பணம் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் அனுப்பி வைத்து விடுவர். இதற்கிடையில் இன்று திருச்சி, கடலூர், விழுப்புரம் , காரைக்குடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் நெருக்கமானவரும், அவரது ஆடிட்டருமான சியான் சந்த் போரா என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் தியாகராய நகரில் உள்ள இவரது வீட்டில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் பிரியா தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

இவரது வீட்டில் பணம் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் சோதனையில் என்ன சிக்கியது என்ற விவரத்தை அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர். இது குறித்து பின்னர் தெரிவிப்பதாகவும் கூறி புறப்பட்டு சென்று விட்டனர்.

No comments:

print