Thursday, March 17, 2011

ம.தி.மு.க., புறக்கணிப்பு தற்கொலைக்கு சமம் : நாஞ்சில்சம்பத் ஆவேசம்

திருச்சி : ம.தி.மு.க.,வை புறக்கணித்தது, அ.தி.மு.க., தற்கொலை செய்து கொண்டதற்கு சமமானது என ம.தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டு விட்டதாக தே.மு.தி.க., - இடதுசாரிகள்.,- புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கின்றன. மற்‌றொரு புறம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெகுண்டு எழுந்துள்ளது ம.தி.மு.க.,.

ம.தி.மு.க., வுக்கு சீட் வழங்காதது குறித்து திருச்சியில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கள‌ை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது : நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது. இதற்கான பலனை அது அனுபவிக்கும் என ஆவேசமாக தெரிவித்தார். ஜெயலலிதா விலை போய் விட்டார் என்றும் கூறினார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் ‌கொள்ளமுடியாது. வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். இருப்பினும் ம.தி.மு.க.,வின் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை (19ம் தேதி) கட்சி உயர்நிலைக்கூட்டத்துக்ப் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

print