Tuesday, February 15, 2011

தமிழகம், புதுச்சேரியில் 17, 18ல் கோர்ட் புறக்கணிப்பு: வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சேலம் : வக்கீல்களுக்கு சேம நல நிதி உயர்த்தி கொடுக்க வலியுறுத்தியும், ஐகோர்ட்டில் நடந்த மோதல் சம்பவ தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும், பிப்.,17, 18ம் தேதிகளில், கோர்ட் புறக்கணிப்பு செய்ய, தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், வக்கீல்களுக்கு சேம நல நிதியை, இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி கொடுக்கும்படி, நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. டிச.,26ம் தேதி, சென்னை ஐகோர்டில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், கலந்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி, சேம நல நிதியை உயர்த்துவதாக உறுதி அளித்தார். இன்னும் அதற்காக நிதி ஒதுக்காமல், காலதாமதம் செய்து வருகின்றனர். உடனடியாக நிதி ஒதுக்கித் தர வற்புறுத்தி, வரும் 17ம் தேதி, அடையாள கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். 2009ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்து, வக்கீல்களையும், ஐகோர்ட் நீதிபதியையும், ஊழியர்களையும், பொது மக்களையும் தாக்கினர். இது வரை தமிழக அரசு எந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டு முடியும் நாளான, பிப்.,18ம் தேதியை, நீதித்துறையின் கருப்பு தினமாக கருதி, அன்றும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொள்வர். இவ்வாறு பரமசிவம் கூறினார்.

No comments:

print