Sunday, February 20, 2011

தி.மு.க., திட்டம் குறித்து காங்., ஐவர் குழு இன்று முடிவு: அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு

கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்கவுள்ளது. சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்டணியாக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டாலும், "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசு எடுத்துவரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஆளுங்கட்சி, "டிவி'யின் வாசலில் கால் வைத்துள்ள சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள், இந்த கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் குழு, இன்று சந்திக்கிறது. ஐவர் குழுவில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்.எல்.ஏ., ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டணியில் இடம்பிடித்துள்ள பா.ம.க.,வுக்கு, கடந்த முறை வழங்கப்பட்டுள்ள, 31 சீட்கள், மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. "ஆட்சியில் பங்கு' என்ற கோஷம் எழுந்தாலும், வெளிப்படையாக எந்த நெருக்கடியையும் தராமல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த ஆதரவுக்கு கைமாறாக, இந்த முறை, கூடுதல் இடங்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரசார் உள்ளனர்.

மேலும், கடந்த முறை, இந்த கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தற்போது இல்லாததால், அந்த இடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் உள்ளது. ஆட்சியில் பங்கு, 70 தொகுதிகள் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், ஆட்சியில் பங்கு கிடைக்காவிட்டாலும், 55 முதல், 60 தொகுதிகள் கிடைத்தாலே காங்கிரசார் உற்சாகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகி விடுவர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இந்த எண்ணிக்கையில் தொகுதிகளை வழங்க, தி.மு.க.,வும் தயாராக இருப்பதாகவே, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகளின் எண்ணிக்கை, முதல்வர் முன்னிலையில் இன்று முடிவானால், அந்த தகவல் டில்லி தலைமைக்கும், ராகுலுக்கும் தெரிவிக்கப்பட்டு, பின், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது, குலாம் நபி ஆசாத், தமிழகம் வரவழைக்கப்படுவார் என்றும், அவர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என காங்.,தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

print