Wednesday, February 16, 2011

தேர்தலில் தனித்து நிற்க வேண்டியது தானே? தி.மு.க.,வுக்கு ஐ.ஜே.கே., நிறுவனர் கேள்வி

திருவாரூர்: ""மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்துள்ளீர்கள் என்றால், தனித்து நின்று தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே?'' என, தி.மு.க.,வுக்கு, ஐ.ஜே.கே., நிறுவனர் பச்சமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.


திருவாரூர் கீழ வீதியில், நேற்று முன்தினம் இரவு நடந்த இந்திய ஜனநாயக கட்சி பொதுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் பச்சமுத்து பேசியதாவது:ஈ.வெ.ரா., தனக்கு வாரிசு தேவை என்பதை கூறிய போது, "வாரிசு அரசியல் கூடாது' என, எதிர்த்து வெளியேறி, தி.மு.க.,வை அண்ணாதுரை துவங்கினார். ஆனால், இப்போது தி.மு.க.,வில் கருணாநிதியின் வாரிசு அரசியல் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் பார்த்து வருகிறீர்கள்.இந்தியா முழுவதும், 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, ஆட்சி செய்து வருகின்றனர். அதில், இந்தியாவிலேயே, தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
எப்போது பொங்கல் வரும், இலவச வேட்டி, சேலை கிடைக்கும் என்று மக்களை கையேந்த வைத்துள்ள திராவிட கட்சிகள், 40 ஆண்டு காலமாக எதை சாதித்துள்ளனர். ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கூறி வருகின்றனர்.பிற நாடுகளில் பிரதமர்கள் எல்லாம், 50 வயதுக்குள் உள்ளனர். ஆனால், நம் நாட்டின் பார்லிமென்ட் முதியோர் இல்லமாக உள்ளது. மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்துள்ளீர்கள் என்றால், தனித்து நின்று தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே? உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லை.இவ்வாறு பச்சமுத்து பேசினார்.

No comments:

print