Wednesday, February 16, 2011

தா. பாண்டியனுக்கு எதிராக கட்சியில் போர்க்கொடி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழக தலைமையின் போக்கைக் கண்டித்து, முன்னாள் எம்.பி., உள்ளிட்ட, 22 மாநில நிர்வாகிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் மாநில தலைமைக்கும், அகில இந்திய தலைமைக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிர்வகிக்க, மாநிலக்குழு, மாநில நிர்வாகக் குழு, மாநில செயற்குழு என, மூன்று பிரிவு உண்டு. கட்சியின் மாநில செயலராக இருப்பவர் மூன்று குழுக்களின் ஆலோசனைப் படித் தான் கட்சியை வழி நடத்த வேண்டும்.



இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலராக இருந்த நல்லகண்ணுக்கு அடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக, பாண்டியன் மாநில செயலராக போட்டியின்றி தேர்வாகி, அந்த பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.பாண்டியனின் செயல்பாடு பிடிக்காமல், தமிழக இ.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர்களான திண்டுக்கல் ரத்தினம், விழுப்புரம் அர்ச்சுணன், கிருஷ்ணகிரி நாகராஜரெட்டி, பாண்டியன், நெய்வேலி சேகர், தர்மபுரி சிசுபாலன், ஆறுமுகம், திருச்சி செல்வராஜ், சுப்பிரமணி, ரவீந்திரன் உள்ளிட்ட 18 பேரும், மாநில செயற்குழுவிலிருந்து முன்னாள் திருப்பூர் எம்.பி., சுப்புராயன், மாநில நிர்வாகக்குழுவிலிருந்து தர்மபுரி தேவபேரின்பன், கடலூர் மணிவாசகம், தர்மபுரி இளம்பரிதி என, மொத்தம் 22 முக்கிய மாநில பொறுப்பாளர்கள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து, மாநில தலைமைக்கும், அகில இந்திய தலைமைக்கும் சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

தா. பாண்டியனிடம் கேட்ட போது, ""எங்கள் கட்சியில் யாரும் ராஜினாமா கடிதம் ஏதும் கொடுக்கவில்லை. நீங்கள் குறிப்பிடும் முன்னாள் எம்.பி., இன்றைய நிர்வாகக் குழு கூட்டத்துக்கு வந்திருந்தார். எங்களுக்கு எந்த நோயுமில்லை. நோய் இருந்தால் மருந்து சாப்பிட்டுக் கொள்கிறோம்,'' என்றார்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

print